உலகில் தற்காலத்தில் குழந்தைப்பேறு என்பதே மிகப்பெரிய விடயமாக மாறிவிட்டது. எங்கு பார்த்தாலும் செயற்கை கருத்தரித்தல் பற்றிய செய்திகள் அதிகமாக பேசப்பட்டு வருகின்றது.
இதற்கு முக்கிய காரணமாக நம் மரபணு அளவில் மாறிப்போன அல்லது நாம் மாற்றிவிட்ட உணவுமுறைப் பழக்கங்களும் வாழ்வியல் மாற்றங்கள் தான் என வைத்தியர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
கர்ப்பம் தரிக்கும் தாய்மார்களுக்கு காணப்படும் பலவிதமான குறைபாடுகள் காரணமாக அவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகளுக்கு நோய்கள் கருவிலேயே ஆரம்பித்துவிடுகின்றன.
அதில் மிக முக்கியமான ஒன்றாக குறைப்பிரசவம் விளங்குகின்றது.
புரதான காலத்தில் நம் முன்னோர்களுக்கு பத்து குழந்தைகள் பிறந்தால் அதில் ஒன்றுகூட குறைப்பிரசவமாக இருக்காது. அப்படியே குறைமாதத்தில் பிறந்தால் அந்தக் குழந்தை பெரும்பாலும் இறந்துபோகும்.
நம் குடும்பங்களில் தாத்தா, பாட்டி காலத்தில் இப்படியான ஒரு நிகழ்வு நிச்சயமாக நடந்திருக்கும். குறைமாதத்தில் பிறந்த குழந்தை உயிர் தப்பியிருந்தாலும் சரியான பராமரிப்பு அளிக்காத காரணத்தால், மூளைவளர்ச்சி குன்றியோ ஊனமாகவோ இருந்திருக்கும்.
ஆனால், அந்த நிலை தற்போது முற்றிலும் மாறிவிட்டது.
உண்மையைச் சொல்லபோனால், தற்போது பிறக்கும் குழந்தைகளில் 10வீதம் குறைப்பிரசவமாகவே காணப்படுகின்றது. ஆனால் 10 வீத குறைப் பிரசவக் குழந்தைகளில் 9 வீதக் குழந்தைகளைக் காப்பாற்றிவிட முடியும்.
குறைமாத குழந்தைகள் பற்றியும் அவர்களுக்கு ஏற்படும் பிரச்னைகள், அவற்றுக்கான மருத்துவங்கள் பற்றியும் பார்ப்போம்.
1. குறை மாதக் குழந்தை என்றால் என்ன ?
கர்ப்ப காலத்தில் 37 வாரங்கள் முழுமையடையாமல், சில காரணங்களால் அதற்கு முன்னரே பிறந்துவிடும் குழந்தைகளைத் தான் குறை மாதக் ( Preterm Babies) குழந்தைகள் என்கிறோம்.
2. குறைப் பிரசவத்துக்கான காரணங்கள் என்ன?
* கருவில் ஒரு குழந்தைக்கும் மேல் உருவாகுதல் ( Twin or Triplet gestation).
* செயற்கைக் கருத்தரிப்பு.
* கர்ப்பிணிக்கு கர்ப்பகால ரத்த சோகை ( Gestational_anemia ) , கர்ப்பகால சர்க்கரைநோய் (GDM), உயர் ரத்த அழுத்தம் பாதிப்பு ஏற்படும்போது.
* கர்ப்ப காலத்தில் அடிக்கடி தொற்று நோய் ( Gestational infections and infestations ) பாதிப்பு அல்லது ஏதேனும் ஒரு தொற்றை குணமாக்காது விடுதல் ( சருமநோய் முதல் சொத்தைப் பல் வரை).
* கர்ப்பப்பைக் கோளாறுகள்.
* கர்ப்பப்பை வாய்ப் பகுதியில் பிரச்னைகள்.
* குறிப்பிட்ட காலத்துக்கு முன்னரே திடீரென பனிக்குடம் உடைதல்.
* கர்ப்ப காலத்தில் உதிரப்போக்கு.
* புகைபிடித்தல், புகை பிடிக்கும் கணவர்கள் அல்லது ஆண்கள் உள்ள இல்லங்களில் வசிப்பதால்.
* அவசியமற்ற, மருத்துவர் பரிந்துரைக்காத மருந்துகளை உட்கொள்ளுதல் மற்றும் பரிந்துரையில்லாத உடற்பயிற்சிகள், நடனங்கள்.
* மருத்துவரால் பரிந்துரைக்கப்படும் நேரத்தில் கர்ப்பப்பை வாய்ப் பகுதியில் சிகிச்சைகள் செய்யத் தவறுதல்.
* கர்ப்ப காலத்தில் சிகிச்சை மற்றும் மருத்துவர் ஆலோசனைகளை அலட்சியப்படுத்திப் புறக்கணித்தல்.
3. குறைமாதத்தில் பிறந்தாலும் குழந்தை பாதுகாப்பாக இருக்க என்ன செய்யவேண்டும்?
பேறுகால மருத்துவம் பார்க்கும் மருத்துவமனையிலிருக்கும் வசதிகள் பற்றி அறிந்து வைத்திருக்க வேண்டும். மகப்பேறு மருத்துவர்கள் எந்நேரமும் பணியில் இருத்தல் வேண்டும். பச்சிளங்குழந்தை மருத்துவர்கள் பணியில் இருக்கும் மருத்துவமனையை நாடவேண்டும்.
தரமான சிசு உயிர்காக்கும் உபகரணங்கள்கொண்ட NICU எனும் பச்சிளங்குழந்தை தீவிர சிகிச்சைப் பிரிவு இருக்கும் மருத்துவமனையைத் தேர்ந்தெடுக்க வேண்டும். கைதேர்ந்த பச்சிளங்குழந்தை பராமரிப்பு செவிலியர்களும் இருக்க வேண்டும்.
குழந்தைக்கு உயர் சிகிச்சை தேவைப்பட்டால் வேறு மருத்துவமனைக்கு உடனடியாக மாற்றக்கூடிய வசதிகள் இருக்க வேண்டும். இவையனைத்தும் இருக்கும் பட்சத்தில் குறைமாத குழந்தைப்பேறாக இருந்தாலும் எளிதாகவும் பாதுகாப்பானதாகவும் இருக்கும்.
4.குறைமாத குழந்தைகளுக்கு ஏற்படும் பிரச்னைகள் என்னென்ன ?
குறைமாத குழந்தைகள் முழு வளர்ச்சி அடையும் முன்னரே பாதுகாப்பான கருவறையிலிருந்து வெளியே வருவதால், அவர்களுக்கு சீதோஷண மாற்ற உபாதைகள்தான் முதல் பிரச்னை.
அடுத்ததாக, பிறக்கும் 80 சதவிகிதம் குழந்தைகளுக்கு நுரையீரல் வளர்ச்சியின்மை, இதய கோளாறுகள், மூளை சம்பந்தப்பட்ட பிரச்னைகள், வயிறு மற்றும் குடல் சம்பந்தப்பட்ட தொந்தரவுகள், குறைவான உடல் எடை, உயரம் குறைதல், தலையின் சுற்றளவு குறைவாக இருத்தல் போன்ற பிரச்னைகள் ஏற்படலாம். எளிதாகப் பரவும் கொடுமையான தொற்றுகளும் பாதிக்கலாம்.
5. குறைப்பிரசவத்தில் பிறந்த குழந்தைகளை மருத்துவமனையிலிருந்து வரும்போது செய்யும்போது கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்னென்ன?
குறை மாதத்தில் பிறந்த குழந்தைகளை பச்சிளங்குழந்தை மருத்துவர் இசையும் நேரத்தில்தான் மருத்துவமனையிலிருந்து அழைத்துச் செல்லவேண்டும்.
இதுபோன்று பிறக்கும் குழந்தைகள் Highrisk newborns என பெயரிடப்படுவர். அவர்களுக்கு உடல்நலக் குறைவு எப்போது ஏற்பட்டாலும் நேரம் தாழ்த்தாமல் உடனே மருத்துவரை அணுக வேண்டும்.
தாய்ப்பால் புகட்டும் நேரம், பாலூட்ட வேண்டிய கால இடைவெளி, பால் புகட்டும் முறைகள், உடல் எடை கூட்டும் விசேஷ மருந்துகள், உடல் உஷ்ணத்தைப் பாதுகாக்க கடைப்பிடிக்க வேண்டிய விஷயங்கள், தவறாது தடுப்பூசி போட வேண்டியதன் அவசியம் ஆகியவற்றில் கவனம் செலுத்தவேண்டும்.
குழந்தையின் கேட்கும் திறன், பேச்சுத் திறன், பார்வைத் திறன் செயல்பாடு அறிதல், மூளை நரம்பியல் செயல்பாடு ஆகியவற்றை குழந்தை பிறந்த முதல் வருடத்திலேயே மருத்துவரின் அறிவுறுத்தல்படி பரிசோதிக்கவேண்டும்.
செயல்பாடுகளில் பிரச்னை இருக்கும்பட்சத்தில் அனைத்தையும் கண்டறிந்து நிறை பிரசவக் குழந்தைகளுக்கு இணையாக வளர்த்துவிட முயலவேண்டும்.
இவற்றில் எந்தவொரு விஷயத்தில் அலட்சியம் காட்டினாலும் பிஞ்சுகளின் வாழ்க்கையே தொலைந்துபோகலாம்.
குறைமாதக் குழந்தைகளின் உயிரைக் காப்பாற்றி அவர்களை இயல்பான குழந்தைகளைப் போல் வளர்ப்பது நவீன மருத்துவத்தின் உதவியால் இன்று மிகவும் எளிது.
