இந்தியா – புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாபட்டினம் – கோட்டைப் பட்டினத்தில் இருந்து கடந்த 28ஆம் திகதி மீன்பிடிக்க சென்ற மீனவர்களை எல்லைதாண்டி மீன்பிடித்ததாக தெரிவித்து 24 மீனவர்களையும், 5 படகுகளையும் இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
உடனடியாக இது குறித்து வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும் மத்திய இணை அமைச்சர் முருகனிடமும் தெரிவிக்கப்பட்டது. மீனவர்கள் மற்றும் அவர்களது படகுகளை விரைந்து மீட்க தமிழக பாஜக சார்பாக கோரிக்கை விடுக்கப்பட்டது.
இவ்வாறு பா.ஜ.க வின் தமிழிக தலைவர் அண்ணாமலை விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அவ் அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
இலங்கையில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் கைது செய்யப்பட்ட 24 மீனவர்களை பிணையில் விடுவிக்கவும், 5 படகுகளை விடுவிக்கவும் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.
கைதுசெய்யப்பட்ட மீனவர்கள் தாயகம் திரும்ப துரித நடவடிக்கை எடுத்து வரும் மத்திய அமைச்சர்கள் ஜெய்சங்கர், முருகனுக்கும் தமிழக பாஜக சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம் – என்றுள்ளது.
