டான் குழுமம் யாழ்.மாவட்ட ரீதியில் நடத்தி வரும் “புதிய விடியல்” உதைபந்தாட்டச் சுற்றுப்போட்டியில் இன்று இடம்பெற்ற முதலாவது அரையிறுதிப் போட்டியில் பாடுமீன் அணியை வெற்றிக்கொண்டு சென்.நீக்கிலஸ் அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.
போட்டி ஆரம்பமாகி இறுதி வரை குருநகர் பாடுமீன் அதிரடியான ஆட்டத்தைக் காட்டியது. பாடுமீனின் அதிரடிக்கு எதிராக சளைக்காது இறுவதிவரை கெத்துக்காட்டியது சென்நீக்கிலஸ்.
இந்நிலையில், போட்டியின் முதல் பாதியில் இரு அணிகளும் சமபல ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த நிலையில் கோல் எதனையும் பெறாத நிலையில் முதல்பாதி ஆட்டம் நிறைவுக்கு வந்தது.
இரண்டாவது பாதியாட்டம் ஆரம்பித்த சில நிமிடங்களில் தமது வழமையான அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய பாடுமீன் முதலாவது கோலைப் பெற்றுக்கொண்டது.
முதல் கோல் அடித்த உற்சாகத்துடன் பாடுமீனின் தொடர் ஆட்டம் சூடுபிடிக்கத் தொடங்கியது. மறுமுனையில் எப்படியாவது ஒரு கோல் அடிக்கவேண்டும் என்ற சென்.நீக்கிலஸின் அபார ஆட்டம் அனல் பறக்க ஒரு கோலை அடித்து போட்டியை சமப்படுத்தியது சென்.நீக்கிலஸ்.
இரண்டு அணிகளும் எப்படியாவது ஒரு கோலை அடித்து வெற்றிபெற வேண்டும் என்ற நோக்கில் அபாரமாக ஆடிவந்த நிலையில், இறுதி நேரம் வரை பாடுமீன் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தது.
இந்நிலையில், போட்டி முடிவதற்கு ஒரு நிமிடத்திற்கு முன்னர் தமக்கு கிடைத்த அரிய சந்தர்ப்பத்தை அழகாக பயன்படுத்தி இரண்டாவது கோலை அடித்து பாடுமீனை கிறங்கடித்து புதிய விடியல் தொடரின் முதலவாது அணியாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது சென்நீக்கிலஸ்.
இரண்டு அணிகளுக்கும் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் புடைசூழ இடம்பெற்ற இப்போட்டியில் பலம் வாய்ந்த பாடுமீன் அணியை வெற்றிக்கொண்டு சென்.நீக்கிலஸ் அணி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.
