கிளிநொச்சி – கிராஞ்சியில் அமைக்கப்பட்டிருந்த சட்டவிரோத கடலட்டை பண்ணைக்கு எதிராக போராடிய மீனவர்கள் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், கிளிநொச்சி நீதிமன்றத்தால் இன்று (08) பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர.
கைது செய்யப்பட்ட மீனவர்களை பொலிஸார் இன்று (08) கிளிநொச்சி நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்தினர். நீதிமன்றம் அவர்களை பிணையில் செல்வதற்கு அனுமதியளித்துள்ளதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஊடக பேச்சாளரும் சட்டத்தரணியுமான கனகரத்தினம் சுகாஷ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது,
“கிராஞ்சியில் அமைக்கப்பட்டிருக்கின்ற சட்டவிரோதமான கடல் அட்டைப் பண்ணைகளுக்கு எதிராக, ஜனநாயக வழியில் போராடிக் கொண்டிருக்கும் அப்பாவி மீனவ குடும்பங்களுக்கு எதிராக பொலிஸார் வழக்கு தாக்கல் செய்துள்ளனர்.
வழக்கானது இன்றையதினம் கிளிநொச்சி நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டது. இந்த மீனவர்கள் சார்பில் நான் ஆஜராகியிருந்தேன்.
இன்றையதினம் நாங்கள் நீதிமன்றத்திலே பொலிஸாருடைய வழக்கை எதிர்த்து குற்றவியல் நடவடிக்கை முறை சட்டக்கோவையின் 81ஆம் பிரிவின் கீழ் பொலிஸார் இந்த வழக்கை தாக்கல் செய்ய முடியாது என்றும், இதில் அப்பாவி மீனவர்களுடைய வாழ்வாதாரமும் ஜீவனோபாயமும் பாதிக்கப்பட்டிருக்கின்றபடியால் சட்டவிரோதமாக எந்தவிதமான அனுமதியும் பெறாது அமைக்கப்பட்டிருக்கின்ற கடலட்டை பண்ணைகள் அகற்றப்பட வேண்டும் என்று ஜனநாயக வழியில் போராடுகின்றார்கள் என்றும், ஜனநாயக ரீதியில் முன்னெடுக்கப்படுகின்ற போராட்டங்களை 81வது பிரிவின் கீழ் வழக்கு தாக்கல் செய்து நீதிமன்றத்தில் கொண்டுவர முடியாது என்றும் சுட்டிக்காட்டி வாதாடியிருந்தோம்.
அந்த அடிப்படையில் இன்றையதினம் சந்தேக நபர்களாக முற்படும் தப்பட்ட மீனவர்களை பிணையில் விடுவித்த நீதிமன்றம் அடுத்த தவணை கடலட்டை பண்ணையாளர்களை நீதிமன்றத்தில் முற்படுத்துமாறு கட்டளையிட்டிருந்தது” – எனத் தெரிவித்தார்.
