காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இந்திய ஒற்றுமை யாத்திரை நடைபயணத்தை செப்டம்பர் மாதம் 7-ம் தேதி கன்னியாகுமரியில் இருந்து தொடங்கினார்.
பல மாநிலங்களில் சுமார் 2,400 கி.மீ. தூரத்தைக் கடந்து தற்போது 90 நாளைக் கடந்து ராஜஸ்தானில் அவரது நடைபயணம் தொடர்ந்து வருகிறது.
இந்நிலையில், ராஜஸ்தானின் கோட்டா பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ராகுல் காந்தி கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையில்,
“ராஜஸ்தானில் காங்கிரஸ் கட்சி மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை தவறாமல் நிறைவேற்றுகிறது. அங்கு 22 லட்சம் விவசாயிகளின் கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன. ராஜஸ்தானில் 8 லட்சம் விவசாயிகள் இலவச மின்சாரம் பெற்று பயனடைந்து வருகின்றனர்.
கிழக்கு ராஜஸ்தான் கால்வாய் திட்டத்திற்கு தேசிய அங்கீகாரம் அளிப்பதாக பிரதமர் மோடி உறுதியளித்தும் அதனை நிறைவேற்றவில்லை. அந்தத் திட்டத்தினை மாநில அரசு தனது சொந்த நிதியில் செயல்படுத்த திட்டமிட்டபோதும் மத்திய அரசு அதற்கு அனுமதி வழங்க மறுக்கிறது” எனத் தெரிவித்தார்.
