இந்த மாதத்துக்குள் கடன் மறுசீரமைப்புக்கான உறுதிமொழியை சீனா வழங்கினால் ஜனவரிக்குள் சர்வதேச நாணய நிதியத்தின் (ஐ. எம். எவ்.) நிதியுதவிக்கான அனுமதியைப் பெற முடியும் என்று எதிர்பார்ப்பதாக இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்தார்.
பொருளாதார உச்சி மாநாட்டில் உரையாற்றிய போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
“சீனாவின் உறுதிமொழியை பெறுவதற்கு இலங்கை தற்போது செயல்பட்டு வருவதாகத் தெரிவித்த அவர், கடன் மறுசீரமைப்புக்கான ஆதரவில் இலங்கையின் கடன் வழங்குநர்களுடன் பொதுவான ஒருமித்த கருத்தைப் பெறுவதே முன்னுரிமை என்று குறிப்பிட்டார்.
நவம்பர் மாதத்துக்குள் சீனாவின் உறுதிமொழியைப் பெறுவதற்கு முதலில் திட்டமிடப்பட்டிருந்த போதிலும், தாமதத்தின் பின்னர் சீனாவுடனான கலந்துரையாடல் ஆரம்பிக்கப்பட்டது. சீனாவின் உறுதிமொழிகளைப் பெறுவதில் தாம் ஈடுபட்டுள்ளதாகவும் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் கண்டுள்ளதாகவும் குறிப்பிட்ட அவர், இலங்கைக்கு ஆதரவாக பாரிஸ் கிளப் மற்றும் இந்தியா ஏற்கெனவே உறுதி அளித்துள்ளன என்று சுட்டிக்காட்டினார்.
திட்டமிட்டபடி நவம்பரில் சீனாவின் உத்தரவாதம் கிடைத்திருந்தால், நிதி உதவிக்கான ஐ. எம். எவ். பணிப்பாளர் சபையின் அனுமதி டிசெம்பரில் கிடைத்திருக்கும். எவ்வாறாயினும், சீனாவின் பேச்சில் ஏற்பட்ட தாமதம் இதனைத் தடுத்துள்ளது. டிசெம்பர் மாதத்துக்குள் சீனாவின் உறுதிமொழியைப் பெறுவதே நமது நோக்கம். அத்தகைய உடன்பாடு எட்டப்பட்டால், ஜனவரி மாதம் நிதி உதவிக்கான சர்வதேச நாணய நிதியத்தின் அனுமதியை பெற்றுக்கொள்ள முடியும்” – என்றார்
