யாழ்ப்பாணத்தில் காற்று மாசுபாடு உச்சத்தைத் தொட்டுள்ளது. இதயம், சுவாசம் சம்பந்தப்பட்ட நோயாளர்கள் முடிந்தவரை வீட்டிலேயே இருக்க வேண்டும். வெளியே செல்பவர்கள் முகக்கவசத்தை கட்டாயம் அணிந்து செல்லுங்கள் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நேற்றைய தினம் வளிமாசுபாடு குறித்து தேசிய கட்டட ஆய்வு நிறுவகம் இந்த எச்சரிக்கையை விடுத்திருந்தது. அத்துடன், காற்று மாசுபாட்டால் பாதிக்கப்பட்ட நகரங்களையும் வெளியிட்டிருந்தது.
இதனிடையே, நேற்று முன்தினம் சுற்றுப்புற காற்றுத்தரக் கண்காணிப்பு நிலையத் திறப்பு விழாவில் பங்கேற்பதற்காக யாழ்ப்பாணம் வந்த சுற்றுச்சூழல் அமைச்சின் செயலாளரும் மருத்துவருமான அனில் ஜாசிங்கவும் இந்த எச்சரிக்கையை விடுத்திருந்தார்.
இதேசமயம், ஐ. கியூ. எயார் (IQ Air) என்ற சுவிற்சர்லாந்து நாட்டை சேர்ந்த வளியின் தர தொழில்நுட்ப நிறுவனத்தின் தளத்திலும் இந்த விடயங்கள் பதிவு செய்யப்பட்டடுள்ளன. அந்த நிறுவனத்தின் தரவுப்படி யாழ்ப்பாணம் – வடக்கு மாகாணத்தின் காற்று தரச் சுட்டி 180 ஏ. கியூ. ஐ. என்ற மோசமான நிலையை எட்டியுள்ளதை வெளிப்படுத்தியுள்ளது.
தற்போது நிலவும் மோசமான காலநிலை காரணமாக இந்தியாவிலிருந்து வரும் மாசுபட்ட காற்றாலேயே இலங்கை பாதிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
யாழ்ப்பாணத்தில் காற்று மாசுபாடானது பி. எம்.2.5 என்ற அளவை எட்டியுள்ளது. இந்த மோசமான நிலைமையை இலங்கையால் கட்டுப்படுத்த முடியாது. எனவே, முதியவர்கள், குழந்தைகள், இதய நோயாளிகள், சுவாசம் சார்ந்த நோயுள்ளவர்கள் முடிந்தவரை வீடுகளில் இருப்பது நல்லது. வெளியே நடமாடுபவர்கள் முகக்கவசத்தை அணிவது அவசியமானது என்றும் குறிப்பிட்டார்.
இதனிடையே, ஐ. கியூ. எயார் நிறுவனத்தின் தரவுப்படி, கடந்த சில நாட்களை விட நேற்று முன்தினம் மாசுபட்ட காற்று உச்சளவில் காணப்பட்டது. மாலை 6.30 மணியளவில் காற்றின் மாசு 222 ஏ. கியூ. ஐ. என்ற மாசுபாட்டை எட்டியதுடன், அன்றைய தினம் காற்று மாசுபாடு 222 ஏ. கியூ. ஐ. என்ற உச்சளவிலேயே காணப்பட்டது.
நேற்றைய தினம் சற்றுக் குறைந்து இருந்தாலும், 180 ஏ. கியூ. ஐ. என்ற சராசரி நிலைமையே அதிகம் காணப்பட்டது. இது வரும் நாட்களிலும் நீடிக்கலாம் என்றபோதும் காற்றின் வேகத்தைப் பொறுத்து மாசுக்காற்றின் தன்மை அதிகரித்தோ அல்லது குறைந்தோ காணப்படும் என்று ஐ. கியூ. எயார் தளத்தின் தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன.
எனினும், காற்றின் வேகம் அதிகரிக்கும் சமயத்தில் மாசுபட்ட காற்றின் அளவு அதிகமாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதேநேரம், தேசிய கட்டட ஆய்வு நிறுவகத்தின் தகவலின்படி முக்கிய நகரங்களில் காற்றின் தரச் சுட்டி, யாழ்ப்பாணத்தில் 212, கம்பஹாவில் 189, தம்புள்ளையில் 170 , கொழும்பில் 169, கண்டியில் 161, நீர்கொழும்பில் 170, அம்பலாந்தோட்டையில் 157 என்ற அளவிலும் காணப்பட்டன.
