கட்டாரில் நடைபெற்று வரும் உலகக்கிண்ண உதைபாந்தாட்டத் தொடரில் நேற்று இடம்பெற்ற காலிறுதிப் போட்டியொன்றில் குரோஷியாவிடம் தோல்வியடைந்து பலம் வாய்ந்த அணியான பிரேசில் வெளியேறியது.
நேற்றிரவு (09) 8.30 மணிக்கு எஜிகேசன் சிட்டி விளையாட்டரங்கில் இடம்பெற்ற முதலாவது கால் இறுதி ஆட்டத்தில் பிரேசில் அணி குரோஷியாவை எதிர் கொண்டது.
முதல் பாதி ஆட்டத்தில் எந்த அணியும் கோல் பெறவில்லை. இரண்டாவது பாதி ஆட்டத்திலும் இரண்டு அணிகளும் விறுவிறுப்பாக விளையாடிய போதும் கோல்களைப் பெறவில்லை.
இந்நிலையில், கூடுதல் ஆட்ட நேரத்தின்போது 106 வது நிமிடத்தில் பிரேசில் வீரர் நெய்மர் முதலாவது கோலை அடித்தார். தொடர்ந்து 117வது நிமிடத்தில் குரோஷியா வீரர் புருனோ பெகோவிக் ஒருகோல் அடிக்க ஆட்டம் சமனிலையில் முடிந்தது.
இந்நிலையில் வெற்றியைத் தீர்மானிப்பதற்காக தண்ட உதை வழங்கப்பட்டது. இதில் 4-2 கோல் கணக்கில் பிரேசிலை வீழ்த்திய குரோஷியா அணி அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது.
