கட்டாரில் நடைபெற்று வரும் உலகக்கிண்ண உதைபாந்தாட்டத் தொடரில் நேற்று இடம்பெற்ற மூன்றாவது காலிறுதிப் போட்டியில், இறுதிப் போட்டி வரை முன்னேறும் என்று பலராலும் எதிர்பார்க்கப்பட்ட போர்த்துக்கல் அணி மொரோக்கோவிடம் தோல்வியடைந்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்தது.
நேற்றிரவு (10) 8.30 மணிக்கு அல்துமாமா
விளையாட்டரங்கில் இடம்பெற்ற மூன்றாவது காலிறுதி ஆட்டத்தில் போர்த்துக்கல் அணி மொரோக்கோ அணியை எதிர் கொண்டது.
முதல் பாதி ஆட்டம் நிறைவடைவதற்கு சில நிமிடங்களுக்கு முன்னர் ஆட்டத்தின் 42-வது நிமிடத்தில் மொரோக்கோ அணியின் யூசுப் என் நெய்ஸிரி ஒரு கோலினை அடித்து மொரோக்கோ அணியினை முன்னிலைப் படுத்தினார்.
இரண்டாவது பாதியாட்டத்தில் இரு அணிகளும் எவ்வித கோல்களையும் பெறவில்லை. இறுதியில் மொரோக்கோ அணி 1 : 0 என்ற கோல்கணக்கில் போர்த்துக்கல் அணியை வெற்றி கொண்டு அரையிறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றது.
மொரோக்கோ அணி முதல் முறையாக உலக கோப்பை அரையிறுதிக்கு தகுதி பெற்று சாதனை படைத்துள்ளது. ஆபிரிக்க கண்டத்தை சேர்ந்த அணி அரை இறுதிக்கு இதுவரை நுழைந்தது இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
