யாழ்ப்பாணம் பலாலி சர்வதேச விமான நிலையத்திலிருந்து சென்னைக்கான விமான சேவைகள் இன்று (12) முதல் ஆரம்பமாகியுள்ளது.
இதன்படி அலையன்ஸ் எயார்லைன்ஸ் என்ற விமான சேவை நிறுவனம் சென்னையில் இருந்து பலாலிக்கு விமான சேவையை ஆரம்பித்துள்ளது.
வாரமொன்றுக்கு இந்த விமான சேவை நிறுவனத்தினால் நான்கு தினங்களுக்கு சேவைகள் நடத்தப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் பயணியொருவர் 20 கிலோ வரை பொருட்களை விமானத்தில் எடுத்துச்செல்லமுடியும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தியாவின் அலையன்ஸ் எயார்லைன்ஸ் விமானம் சென்னையில் இருந்து புறப்பட்டு யாழ்ப்பாணம் விமான நிலையத்தில் திங்கட்கிழமை(12) முற்பகல் 11.30 மணிக்கு தரையிறங்கியது.
இந்த விமானத்தில் இன்றைய ஆரம்ப நிகழ்வுக்கான இந்திய பயணிகள் 28 பேர் வருகை தந்தனர். இந்தியா பிரதிநிதிகளை இலங்கை அமைச்சர் மற்றும் இலங்கை அதிகாரிகள் வரவேற்றனர்.
இதையடுத்து யாழ்ப்பாணம் விமான நிலையத்தில் அலையன்ஸ் எயார்லைன்ஸ் (Alliance Air) விமானிகளால் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது.
இந்நிகழ்வில் இலங்கை அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ, வடக்கு மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா, யாழ்.மாவட்ட அரச அதிபர் க.மகேசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
