“திருகோணமலை மக்கள் தனக்கு ஆணை வழங்கியுள்ளதாகவும், மத்திய குழுவினால் தன்னை பதவி விலக்க முடியாது எனவும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்ததாக” மாவை.சோ.சேனாதிராசா தெரிவித்துள்ளார்.
தமிழரசு கட்சியின் மத்தியகுழுக் கூட்டம் நேற்று (11) வவுனியாவில் இடம்பெற்றது. இதன் போதே மாவை.சேனாதிராசவால் மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்தமாதம் தமிழரசு கட்சியின் மத்திய செயற்குழு நடந்த போது திருகோணமலையில் இருந்து வந்த மக்கள் குழுவினர் “இயலாமல் உள்ள சம்பந்தன் ஐயா பதவி விலகி வல்லமை உள்ள ஒருவரை நியமிக்க வேண்டும்” எனக் கோரியிருந்தனர். அத்துடன் சம்பந்தன் பதவி விலகா விட்டால் கோ கோம் சம்பந்தன் போராட்டத்தை தாம் தொடரவுள்ளதாகவும் அம் மக்கள் குழுவினர் எச்சரித்து சென்றாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில், சம்பந்தன் பதவி விலகுவது தொடர்பில் சம்பந்தனுடன் பேசுவதற்கு ஒரு குழு நியமிக்கப்பட்டது. மாவை.சேனாதிராசா, சி.வீ.கே.சிவஞானம், எம்.ஏ.சுமந்திரன், ப.சத்தியலிங்கம் ஆகியோரே நியமிக்கப்பட்டிருந்தனர்.
இந்நிலையில், நேற்று இடம்பெற்ற மத்திய குழு கூட்டத்தில் சம்பந்தனின் பதவி விலகல் தொடர்பில் நியமிக்கப்பட்ட குழுவினால் “திருகோணமலை மக்கள் தனக்கு ஆணை தந்துள்ளதாகவும், அவர்களின் ஆணைய தான் மீற மாட்டேன்” எனவும் சம்பந்தன் தெரிவித்ததாக தெரிவிக்கப்பட்டது.
