இந்தியா – பெங்களூரில், 16 வயதுச் சிறுமியை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக 73 வயது முதியவர் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
கர்நாடகா தலைநகர் பெங்களூரில் உள்ள ஹென்னுர் பகுதியில் வசித்து வந்தவர் குப்பண்ணா என்ற முதியவர். இவர் அந்தப் பகுதியில் கட்டட வேலை செய்து வந்தார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு 9.30 மணியளவில், துணி காயப்போடச் சென்ற பக்கத்து வீட்டை சேர்ந்த 16 வயது சிறுமியை, தனது வீட்டுக்கு குப்பண்ணா அழைத்துச் சென்றதாகக் கூறப்படுகிறது.
இதனிடையே, வெகு நேரமாகியும் வீட்டுக்குத் திரும்பாத சிறுமியைத் தேடிய குடும்பத்தினர், அருகில் இருந்த குப்பண்ணாவின் வீட்டில் நிர்வாணமாக இருந்த சிறுமியை கண்டுபிடித்து அழைத்துச் சென்றதாகத் தெரிகிறது.
குப்பண்ணா, அந்தச் சிறுமியை தனது வீட்டுக்கு அழைத்துச் சென்று குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து, அவரிடம் அத்துமீறியிருக்கலாம் என்று சந்தேகித்த குடும்பத்தினர், முதியவரைத் தாக்கியுள்ளனர்.
மேலும், பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில், பொலிஸார் குப்பண்ணாவின் வீட்டுக்குச் சென்றுள்ளனர். அங்கு படுத்திருந்த நிலையில் குப்பண்ணா இறந்து கிடந்துள்ளார்.
கொலை குற்றச்சாட்டின் பேரில் சிறுமியின் உறவினர்கள் இருவர், அவர்களது பக்கத்து வீட்டுக்காரர் ஒருவர் உம்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
