குறட்டைப் பிரச்னையால் நான்கு தலையணை வரை வைத்து தூங்க வேண்டியிருக்கிறது. இதற்கு தீர்வு உண்டா?
குறட்டை என்பது ஒரு பொதுவான பிரச்னையாக மாறிவிட்டது. மக்கள்தொகையில் 40% – 50% பேருக்கு இந்தப் பிரச்னை காணப்படுகிறது. வெறும் குறட்டைவிடுதல் மட்டுமே காணப்படுகிறது என்றால் பெரிய பிரச்னைகள் இருக்க வாய்ப்பில்லை.
ஆனால், குறட்டையுடன் தூக்கத்தில் மூச்சுத்திணறல், மூச்சு தடைபடுதல், சிரமப்பட்டு மூச்சு விடுதல், இரவு தூக்கம் தடைபட்டு அடிக்கடி விழித்துக்கொள்ளுதல், பகலில் தூக்கக் கலக்கத்திலேயே இருப்பது, உட்கார்ந்து இருக்கும்போதே தூங்குதல் உள்ளிட்ட பிரச்னைகள் இருந்தால் அதை சாதாரண பிரச்னையாகக் கடந்துவிடக் கூடாது.
அதேபோல் அதிக எண்ணிக்கையில் தலையணை வைத்துப்படுப்பதும் இயல்பானது கிடையாது. உடனே மருத்துவரை அணுகி ஆலோசனை பெற்று சிகிச்சை பெற வேண்டும்.
8 வயது குழந்தைக்கு சாப்பிட்டதும் வேகமாக மூச்சுவிடும் பிரச்னை இருக்கிறது. இது எதனால் ஏற்படுகிறது?
பொதுவாகவே அதிக உடல் எடையின் காரணமாக வயிறு பெரிதானால், அது நுரையீரலை அழுத்தும். சாப்பிட்டதும் மீண்டும் வயிறு பெரிதானால் இன்னும் அதிகமாக நுரையீரலை அழுத்தும். உடல் பருமனுடன் வேறு பிரச்னைகள் இருந்தாலோ, சாப்பிட்டதும் மூச்சுவிடும் வேகம் அதிகரித்தாலோ தாமதிக்காமல் குழந்தை நல மருத்துவரை அணுக வேண்டும்.
5 வயது குழந்தைக்கு, கடந்த 8 மாதங்களாக இரவு நேரத்தில் அதிக இருமல் பிரச்னை இருக்கிறது. அடிக்கடி சளி, காய்ச்சல் பிரச்னையும் ஏற்படுகிறது. இதற்குத் தீர்வு என்ன?
ஏதாவது வைரஸ் தொற்றுக்குப் பிறகு இருமல் பிரச்னை ஏற்படலாம். இரண்டு வாரத்துக்கு மேல் காய்ச்சலோ, தொடர் இருமல் இருப்பதோ இயல்பானது இல்லை. காது, மூக்கு தொண்டை, நுரையீரலில் அலர்ஜி அல்லது தொற்று ஏற்பட்டிருக்கிறதா என்றும், இவை தவிர வேறு ஏதாவது தொற்று ஏற்பட்டிருக்கிறதா என்றும் பார்க்க வேண்டும்.
8 மாதங்களுக்கு மேல் இருமல் தொடர்வதால், வேறு பிரச்னைகள் இருக்க வாய்ப்புள்ளது. எனவே, ஒரு நுரையீரல் சிகிச்சை மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது நல்லது.
நுரையீரல் ஆரோக்கியமாக உள்ளது என்பதை எப்படிக் கண்டறிவது?
நுரையீரல் ஆரோக்கியத்தை Lung Function Test என்ற பரிசோதனையின் மூலம் அறிந்து கொள்ளலாம். இந்தப் பரிசோதனைகளிலும் பல்வேறு வகைகள் உள்ளன. பொதுவாக, நுரையீரல் செயல்பாட்டை அறிந்துகொள்ள Spirometry என்ற பரிசோதனை செய்யப்படும். இது மருத்துவமனை மற்றும் ஆய்வகங்களில் மட்டுமே செய்ய முடியும்.
சளி, இருமல் பிரச்னைகளுக்கு சுயமாக மருந்து மாத்திரைகள் எடுப்பது சரியானதா?
எந்த மாத்திரையையும் மருத்துவர் பரிந்துரை இல்லாமல் எடுக்கக்கூடாது. தும்மல், சளி, இருமல் என எந்தப் பிரச்னையாக இருந்தாலும் அதன் தீவிரத்தை லேசானது, மிதமானது, கடுமையானது என்று பிரிக்க வேண்டும்.
பிரச்னை எந்த நிலையில் இருக்கிறது என்பதை அறிந்து தீவிரமாக இருக்கும்போது அதற்கேற்றாற்போல் மருந்து, மாத்திரைகளின் அளவைக் கூட்ட வேண்டும். குறைவாக இருக்கும்போது குறைக்க வேண்டும். இதெல்லாம் மருத்துவர்களால் மட்டுமே பரிந்துரைக்க முடியும்.
பொதுவாக சளி, இருமல் பிரச்னைகள் அலர்ஜி, நோய்த்தொற்று, நிமோனியா, காசநோய், கோவிட் என ஏதாவது பிரச்னைக்கான அறிகுறிகளாகவும் இருக்கலாம். 14 நாள்களுக்கு மேல் இருமல், சளி இருந்தால் தீவிரமான பிரச்னை ஏதாவது இருக்கிறதா என்பதை கட்டாயம் பரிசோதிக்க வேண்டும். எனவே, சுய மருத்துவத்தில் ஈடுபடுவதைத் தவிர்க்க வேண்டும்.
