ஜனாதிபதியின் அழைப்பின் பேரில் சர்வகட்சி கூட்டம் ஜனாதிபதி தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் நேற்று (13) மாலை நடைபெற்றது.
இந்த கூட்டத்தை தலைமை தாங்கிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உரையாற்றுகையில் இனப்பிரச்சினை தீர்வுக்கான அவசியத்தை வலியுறுத்தினார்.
பின்னர், அமைச்சர் விஜயதாச ராஜபக்ச உரையாற்றினர். காணாமல் ஆக்கப்பட்டவர்கள் விவகாரம், அரசியல் கைதிகள் விவகாரத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை அவர் விவரித்தார்.
காணாமல் ஆக்கப்பட்டவர்கள் விவகாரத்தில் இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.
அரசியல் கைதிகள் விவகாரத்தில் உள்ள சட்ட விவகாரங்களை விவரித்த விஜயதாச ராஜபக்ஷ அரசியல் கைதிகளை விடுவிக்க படிப்படியாக நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.
பின்னர் கருத்து தெரிவித்த இரா.சம்பந்தன் , சி.வி விக்னேஸ்வரன் ஆகியோர் தமிழ் கட்சிகள் ஏற்கனவே கூடி எடுத்த முடிவை தெரிவித்தனர்.
வடக்கு கிழக்கில் நில அபகரிப்பு நிறுத்தப்பட்டு, நிலங்கள் மீள கையளிக்கப்பட வேண்டும், உடனடியாக மாகாணசபைத் தேர்தல்களை நடத்த வேண்டும், வடக்கு கிழக்கு பிரதேசத்தில் சுய ஆட்சி வேண்டும், புதிய அரசியல் அமைப்பு உருவாக்கப்பட வேண்டும்.
அரசியல் கைதிகளின் விடுதலை காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரத்தில் பொறுப்புக்கூறல் உடனடியாக ஆரம்பிக்க வேண்டும்,
இவை தொடர்பான ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் ஜனவரி 31ம் திகதிக்குள் செயற்படுத்தப்பட வேண்டும் என்றனர்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் உரையாற்றும்போது காணாமல் ஆக்கப்பட்டவர்கள் அனைவரையும் நீங்கள் கொன்றுவிட்டீர்கள் என்பது நமக்குத் தெரியும். ஆனால் நடந்தது என்ன என்ற உண்மையை கண்டறியப்பட்டு பொறுப்புக்கூறல் நிச்சயமாக நிறைவேற்றப்பட வேண்டும்.
இந்த நிலையில் தமிழ் தரப்புகளின் கூற்றுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெளிவான கருத்தை தெரிவிக்காத நிலையில், சாதகமாக அணுகலாம் என்று பதில் அளித்துள்ளார்.
இந்த கூட்டத்தில் பொதுஜன பெரமுனவின் சார்பில் கலந்து கொண்ட மஹிந்த ராஜபக்ச, செயலாளர் காரிய வசம் ஆகியோர் கருத்துத் தெரிவிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
