“எந்தவிதமான நிபந்தனைகளும் இல்லாமல் தமிழ்த் தலைமைகள் ஜனாதிபதியுடன் பேச்சுக்கு சென்றது தமிழினத்துக்கு செய்த பச்சைத் துரோகம்”, என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
கட்சியின் தலைமையகத்தில் நேற்று (14) தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கத்தின் நினைவேந்தல் நடைபெற்றது. இந்த நிகழ்வில் உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
மேலும், இன்று நாங்கள் பாலசிங்கம் ஐயாவின் நினைவு நாளை அனுஷ்டித்துக் கொண்டிருக்கின்றோம். அவர் இன்று உயிருடன் இருந்திருந்தால் இன்றைய காலகட்டம் அவர் ஒட்டுமொத்த தமிழ்த்தேசத்துக்கும் கையாளுகின்ற ஒரு நிலைமையாகத்தான் இருக்கும்.
ஏனென்றால், அரசாங்கம் இனப்பிரச்னைக்கு தீர்வு காண்பதற்கு ஓர் அழைப்பு விடுத்திருக்கின்ற இந்த நேரத்திலே விடுதலைப் புலிகள் இயக்கம் மௌனிக்கப்படாமல் ஓர் இயங்கு நிலையில் இருந்திருந்தால் எங்களுடைய தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் ஐயாவும் தமிழ்ச்செல்வன் அண்ணையும் அந்த முழுப்பொறுப்பையும் ஏற்று ஒட்டுமொத்த தேசத்துக்காக இந்த நிலைமைகளைக் கையாண்டு இருப்பார்கள்.
2001ஆம் ஆண்டு போர் நிறுத்தத்தின் பின்னரான பல சுற்று பேச்சுகளில் ஒவ்வொரு முறையும் தமிழ்த் தேசத்துக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. எங்களுடைய தேசத்தின் உரிமை சார்ந்த விடயங்களை எந்தவித விட்டுக்கொடுப்புமின்றி இலங்கை அரசுடன் பேசி – இலங்கை அரசின் உண்மை முகத்தை அம்பலப்படுத்துகின்ற ஒரு நிகழ்வாக அமையும் என்ற ஓர் அசைக்கமுடியாத நம்பிக்கை எம்மிடம் இருந்தது.
அதைத்தாண்டி சிங்கள – பௌத்த தேசிய வாதம் தமிழ் மக்களுடைய நியாயத்தை தவிர்க்க முடியாமல் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு நிலைமை உருவானால், தமிழ்த் தேசம் சார்பில் ஒரு மிகத்திறமான தீர்வைப் பெற்றுக்கொடுக்கக்கூடிய தரப்பு என்றால் அது தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு மட்டுமே என்ற ஓர் அசைக்க முடியாத நம்பிக்கை இருந்தது.
விடுதலைப்புலிகள் இயக்கம்தான் தமிழ் மக்களுக்கு ஒரு உயர்ந்த தீர்வைப் பெற்றுக்கொடுக்கும் என்ற யதார்த்தத்தையும் உண்மையையும் அவர்களை எதிர்த்தவர்களால் கூட மறுக்க முடியவில்லை.
இப்படிப்பட்ட தலைமைத்துவத்தோடு ஒப்பிட்டுப் பார்க்கின்றபோது இன்றைக்கு இருக்கக்கூடிய நபர்கள் உண்மையிலேயே அரசியல் கோமாளிகள். இனத்துக்கு வெட்கத்தை ஏற்படுத்துகின்ற நபர்களாகத்தான் இருக்கிறார்கள். இனத்துக்காக எதையும் நடைமுறைப்படுத்தாது தங்கள் எஜமான்களுக்காக இனத்தையே விற்கக்கூடிய ஒரு கேவலமான நபர்களாகத்தான் இன்றைக்கு கட்சித் தலைவர்கள் என்று கூறி பேச்சுக்கு சென்றிருக்கிறார்கள்.
ரணில் விக்கிரமசிங்க ஓர் இனவாத கூட்டத்துக்கு கடமைப்பட்டிருக்கிறார் என்பது எல்லோருக்குமே தெரியும். அவர் ஒட்டுமொத்தமாக சிங்கள தேசத்தாலேயே நிராகரிக்கப்பட்டவர். அவருடைய பேச்சை நம்பி தமிழினம் சென்று ஒரு விட்டுக்கொடுப்பை செய்தால் அது ஒரு நிரந்தர விட்டுக்கொடுப்பு.
அதிலிருந்து நாங்கள் மீளவே முடியாத அளவுதான் நிலைமைகள் இருக்கின்றன. ஆகவே, இந்த பேச்சுகளில் கலந்து கொள்வதால் தமிழினத்துக்கு எந்தவிதமான நன்மைகளும் கிடைக்கப்போவதில்லை.
பேச்சுக்கு போவதற்கு முன்னால் தமிழ் மக்கள் மத்தியில் ஒரு போலி நம்பிக்கையை ஏற்படுத்துவதற்கு சமஷ்டியைத்தான் கேட்கப்போகின்றோம் அதை ஏற்காவிட்டால் வெளியேறுவோம் என்ற விம்பத்தை மக்கள் மத்தியில் ஏற்படுத்திவிட்டு பேச்சில் சமஷ்டி தொடர்பில் அவர்கள் வாயே திறக்கவில்லை.
மூன்றாம் தரப்பு மத்தியஸ்தம் தொடர்பில் பேசிக்கொண்டு பேச்சில் அவர்கள் வாயே திறக்கவில்லை என்பதே ஊடகங்களின் தலைப்பு செய்தி. பேச்சில் கலந்து கொள்ளவேண்டும் என்றும் அதைத் தவிர்த்த எங்களை விமர்சித்துக்கொண்டிருந்த ஊடகங்களே இன்று இதை வெளிப்படுத்தியிருக்கின்றன.
பேச்சு மேசையில் நீங்கள் போய் அமர்ந்து கொள்வதனூடாகவே ரணிலுக்கான அங்கீகாரத்தை கொடுப்பதாக அமையும் என்பதை இவர்களுக்கு நாங்கள் மீண்டும் மீண்டும் கூறினோம். அவர் இந்த பொருளாதார நெருக்கடியிலிருந்து தப்புவதற்கான வாய்ப்பை நீங்கள் கொடுத்துவிட்டீர்கள்.
ஆகக்குறைந்தது அந்த அங்கீகாரத்தை கொடுப்பதாக இருந்தால் இனத்துக்காக கொள்கை ரீதியிலாகவாவது எங்களுக்கொரு முன்னேற்றத்தை கொடுக்கக்கூடிய சூழலையாவது உருவாக்காமல் அந்த அதிகாரத்தை கொடுப்பதானது எதிர்காலத்தில் எங்களுக்கு கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை நாங்கள் நிறைய தடவைகள் கூறியிருந்தோம்.
இலங்கை அரசு பொருளாதார நெருக்கடிக்குள் இருக்கின்ற இந்த தருணத்தில் பேரம் பேசக்கூடிய வாய்ப்புக்கள் நிறையவே இருக்கின்ற இந்தத் தருணத்தில் எந்தவிதமான நிபந்தனைகளும் இல்லாமல் பேச்சுக்கு சென்றது இனத்துக்கும் இந்த தியாகங்களுக்கும் செய்த பச்சைத்துரோகம்” – என்றார்.
