வெறுமனே தேர்தல் வெற்றிக்காக உள்ளூராட்சி தேர்தலை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கட்சிகள் தனித்து சந்திக்க மாட்டாது. இது பற்றி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக கூடி ஆராய்ந்தே முடிவு எடுக்கப்படும். அது தமிழினத்தின் நன்மைகளை பாதிக்காததாக இருக்கும் என்று புளொட் கட்சியின் தலைவர் த. சித்தார்த்தன், ரெலோ கட்சியின் பேச்சாளர் கு. சுரேந்திரன் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
உள்ளூராட்சி தேர்தலில் தமிழரசு கட்சி தொழில்நுட்ப ரீதியாக தனித்து கேட்பது தொடர்பாக சிந்தித்து வருவதாக சுமந்திரன் எம். பி. யாழ்ப்பாணத்தில் நேற்றும் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார். அத்துடன், பங்காளிக் கட்சிகளுடன் பேசியே முடிவு எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார். முன்னதாக, அவர் இந்தக் கருத்தை வவுனியாவில் நடந்த தமிழரசுக் கட்சியின் மத்திய குழு கூட்டத்தில் வலியுறுத்தியிருந்தார். அவரின் இந்தக் கருத்து சர்ச்சையை உருவாக்கியிருந்தது.
இந்நிலையில், இது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சியான புளொட்டின் தலைவர் த. சித்தார்த்தனை தொடர்பு கொண்டு கேட்டது. இதற்கு பதிலளித்த அவர்,
“இந்த விடயம் தொடர்பாக முன்னர் சுமந்திரன் என்னுடன் கலந்துரையாடியிருந்தார். கடந்த உள்ளூராட்சி தேர்தல் (2018) முடிவுகளைத் தொடர்ந்து இது பற்றி கதைத்தோம். ஆனால், அது எழுந்தமானதாக கதைக்கப்பட்டதே தவிர, சாதக – பாதகங்களை அலசி ஆராயப்பட்டது அல்ல. 2018 தேர்தலில் தொங்கு சபைகளையே அமைக்க முடிந்தது. இதனால், பல பாதிப்புக்கள் ஏற்பட்டன. நாம் மட்டும் இந்தப் பாதிப்புகளை எதிர்கொள்ளவில்லை. தேசிய கட்சிகளும் பாதிக்கப்பட்டன. இதற்கு தேர்தல் முறைமையில் விகிதாசாரத்துக்கு அதிக இடம் ஒதுக்கப்பட்டமையே காரணம். எனவேதான், தந்திரோபாயமாக பிரிந்து தேர்தலை சந்திப்பது குறித்துப் பேசினோம்.
ஆனால், இதற்கு தற்போது அவசியம் எழாது என்று கருதுகிறோம். உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கையை அரைவாசியாக – 4 ஆயிரமாகக் குறைப்பது தொடர்பில் பேசப்படுகிறது. தேர்தல் முறைமை மாறினால், அதற்கு அவசியம் எழாது.
எது எப்படி இருப்பினும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாகவே நாம் தேர்தலை சந்திப்போம். தந்திரோபாயத்துக்காக தேர்தலை தனித்து சந்திப்பது என்றாலும் அது குறித்து விரிவாக பங்காளி கட்சிகள் அனைத்தும் கூடி ஆராய்ந்தே முடிவு எடுப்போம். அது தமிழினத்தை பாதிக்காததாகவே இருக்கும். வெறுமனே தேர்தல் வெற்றிக்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தேர்தலை பிரிந்து சந்திக்காது – என்றும் கூறினார்.
இதேவேளை, ரெலோ கட்சியின் பேச்சாளர் சுரேந்திரன் தெரிவிக்கையில்,
தனித்துக் கேட்கும் முடிவை தமிழரசு கட்சி தனியாக முடிவு எடுக்காது – கலந்துரையாடி முடிவு எடுக்கப்படும் என்று சுமந்திரன் எம். பி. கூறியுள்ளார். எனவே, அப்படி கலந்துரையாடி முடிவு எடுக்கும்போது நாம் எமது முடிவை தெரிவிப்போம்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாகவே நாம் தேர்தலை எதிர்கொள்வோம். தேர்தலில் வெற்றி பெறுவதற்காக மட்டும் நாம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக செயல்படவில்லை. தமிழினத்தின் நன்மைக்காக நாம் ஒன்றிணைந்தே செயல்படுவோம் – தேர்தல்களை சந்திப்போம் – என்றார்.
