உள்ளூராட்சி சபைகளுக்கான எல்லை நிர்ணய அறிக்கைக்கு அமைய தேர்தலை நடத்துவதாக இருந்தால் 6 மாதங்களுக்கு மேல் ஆகும். தற்போதைய உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முறைக்கு அமைய தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு உரிய காலத்தில் தேர்தலை நடத்தலாம் என்று எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.
கொழும்பில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற அவர் ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“உள்ளூராட்சி மன்றங்களுக்கான தொகுதி எல்லை நிர்ணய செயல்பாடுகள் தொடர்பில் அனைத்து அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடனான சந்திப்பு எதிர்வரும் 20ஆம் திகதி நில அளவை திணைக்கள கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ளது.
எல்லை நிர்ணயம் தொடர்பில் அரசியல் கட்சிகள் மற்றும் சிவில் அமைப்புக்களின் ஆலோசனை பெற்றுக் கொள்ளப்படும். உள்ளூராட்சி மன்றங்களின் தற்போதைய 8,800 உறுப்பினர்களின் எண்ணிக்கையை உள்ளூராட்சி மன்றங்களுக்கான தொகுதி எல்லை நிர்ணய அறிக்கைக்கையின் பிரகாரம் 5,100 முதல் 5,200 வரை குறைத்துக் கொள்ள மதிப்பிடப்பட்டுள்ளது.
நிர்ணய அறிக்கை 2023 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 28 ஆம் திகதி சமர்ப்பிக்கப்படும். இதனை தொடர்ந்து மீளாய்வு அறிக்கை சமர்ப்பிக்கப்படும்.
உள்ளூராட்சி மன்றங்களுக்கான தொகுதி எல்லை நிர்ணய அறிக்கையின் பரிந்துரைகளின் பிரகாரம் உள்ளுராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதாக இருந்தால் தேர்தலை இன்னும் ஆறு மாத காலத்துக்கு அதிகமான காலம் பிற்போட நேரிடும். ஏனெனில், முன்வைக்கப்படும் பரிந்துரைகளை செயல்படுத்த உரிய கால அவகாசம் வேண்டும்.
தற்போதைய உள்ளூராட்சி தேர்தல் முறைக்கு அமைய தேர்தலை உரிய காலத்தில் நடத்த முடியும். எல்லை நிர்ணய அறிக்கை உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கு தடையாக அமையாது” என்றார்.
