வடமராட்சிக்கிழக்கு வெற்றிலைக்கேணி ஜே/432 கிராம அலுவலர் பிரிவில் குடும்பத் தகராறு காரனமாக கணவனின் வாள் வெட்டுக்கு இலக்காகி மனைவி மற்றும் மகள் இருவரும் படுகாயமடைந்த நிலையில், கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் நேற்று முன்தினம் நண்பகல் பதிவாகியுள்ளது.
இச் சம்பவத்தில் சி.இராசறஞ்சினி, மகள் சி.பவித்திரா ஆகியோரே படுகாயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நாகர்கோவில் வடக்கு பகுதியில் வசித்து வந்த நிலையில் தொடர்ச்சியாக குடும்பத்தில் முரண்பாடுகள் அதிகரித்து வந்துள்ளன.
இதற்கு முன்னரும் மனைவி முன்னர் கணவரால் தலையில் தாக்கப்பட்டு பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்திருந்தார்.
இந்நிலையில், சில மாதங்களாக தாய் மற்றும் மகள் ஆகியோர் வெற்றிலைக்கேணியில் உள்ள அவர்களது உறவினர் வீட்டில் தங்கியிருந்தனர்.
இவ்வேளையில், நேற்று முன் தினம் குறித்த வாள்வெட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
கணவன் மதுபோதையிலேயே இவ்வாறு தாக்குதல் நடத்தியிருப்பதாக தெரியவந்துள்ளது.
வாள் வெட்டுக்கு இலக்காகிய தாயும், மகளும் அவலக்குரல் எழுப்பியதை அடுத்து அங்கு திரண்ட மக்கள் அவசர நோயாளர் காவு வண்டிக்கு தகவல் அனுப்பி கிளிநொச்சி வைத்தியசாலையில் சேர்த்னர்.
அத்துடன் தகராறில் ஈடுபட்ட நபரை கலைத்துப்பிடித்து கட்டிப்போட்டு பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மருதங்கேணிப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
