பிரபல தமிழ் வர்த்தகரான தினேஷ் ஷாப்டர் கொழும்பில் இனந்தெரியாதோரால் கடத்தப்பட்டு – காயங்களுடன் மீட்கப்பட்ட நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
ஜனசக்தி குழுமத்தின் தலைவரான தினேஷ் ஷாப்டர் (வயது 52) கொல்லப்பட்ட இந்தச் சம்பவம் தலைநகர் கொழும்பில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதுடன், நாட்டின் பாதுகாப்பு தொடர்பிலும் பெரும் கேள்வியை எழுப்பியுள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது,
தினேஷ் ஷாப்டர் நேற்று முன்தினம்138 கோடி ரூபாய் கடன்தொகையை பெற்று வருவதாக மனைவியிடம் கூறிவிட்டு வீட்டை விட்டுச் சென்றுள்ளார். குறிப்பிட்ட நேரம் கழித்து அவரின் மனைவி அவரின் கைபேசிக்கு அழைப்பு எடுத்துள்ளார். அச்சமயம், அவரின் கைபேசி செயலிழந்து இருந்துள்ளது.
இதையடுத்து, அவரின் மனைவி எங்கிருக்கிறார் என்பதை அறியும் செயலி மூலம் தேடியுள்ளார். அவர் பொரளை கனத்தை மயானத்தில் இருப்பதாகக் காட்டியுள்ளது. இதனால், சந்தேகமடைந்த அவர், தமது நிறுவனத்தின் அதிகாரி ஒருவரை தொடர்பு கொண்டு விடயத்தைக்கூறி அங்கு சென்று பார்க்குமாறு கூறியுள்ளார்.
அந்த அதிகாரி உடனடியாகவே பொரளை மயானத்துக்கு சென்றுள்ளார். அங்கு அவரின் வாகனம் நின்றுள்ளது. விரைந்து செயல்பட்ட அதிகாரி வாகனத்தை சோதனையிட்டபோது தினேஷ் ஷாப்டரும் அவரின் கார் சாரதியும் கட்டப்பட்ட நிலையில் காயங்களுடன் மீட்கப்பட்டனர்.
தினேஷ் ஷாப்டர் கொட்டனால் தாக்கப்பட்டும் – கம்பியால் கழுத்து நெரிக்கப்பட்ட நிலையிலும் படுகாயமடைந்திருந்தார். அவரின் மரண பரிசோதனை அறிக்கையிலும் இந்தக் காயங்கள் தொடர்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மீட்கப்பட்ட இருவரும் உடனடியாக கொழும்பு தேசிய மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்ட தினேஷ் ஷாப்டர் நேற்று முன்தினம் நள்ளிரவை நெருங்கியவேளை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்தச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
இதேவேளை, கொல்லப்பட்ட தினேஷ் ஷாப்டர் தமிழ் முற்போக்கு கூட்டணியின் முன்னாள் தலைவர் சந்திரா ஷாப்டரின் புதல்வர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
