காணாமல் ஆக்கப்பட்ட தங்கள் சொந்தங்களை தேடி அலைந்ததுடன் போராட்டங்களிலும் பங்கேற்ற 126 பேர் இதுவரை உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
போர் காலத்தில் இராணுவம் மற்றும் அதனுடன் இணைந்து இயங்கிய ஒட்டுக் குழுக்களால் பிடிக்கப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடியும் – அவர்களுக்காக நீதி கோரியும் போராட்டங்கள் இடம்பெற்று வருகின்றன.
இந்தப் போராட்டங்களில் தமது பிள்ளைகளை பிடி கொடுத்த பெற்றோர்களே அதிகளவில் பங்கேற்று வருகின்றனர். வறுமை – நோய் – வயோதிபம் காரணமாக துன்பப்படும் இவர்கள் தங்கள் உறவுகளை தேடி வரும் நிலையிலேயே உயிரிழந்தும் வருகின்றனர்.
இந்நிலையில், காணாமல் ஆக்கப்பட்டோருக்காக நீதி கோரி வவுனியாவில் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டு இன்றுடன் 2 ஆயிரத்து 130 நாட்கள் நிறைவுறுகின்றது. இந்த நாட்களில் மட்டும் தமது உறவுகளை தேடிய 126 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
