வடமராட்சி – வெற்றிலைக்கேணி கடற்பரப்புக்கு அண்மையாக மீன்பிடி படகில் தத்தளித்த நிலையில் காப்பாற்றப்பட்ட 104 ரொஹிங்கிய அகதிகள் காங்கேசன்துறை கடற்படை முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் சிறுவன் ஒருவர் உட்பட ஐவர் தெல்லிப்பழை ஆதார மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.
மியன்மாரிலிருந்து பங்களாதேஷிக்கு இடம்பெயர்ந்திருந்த இந்த அகதிகள், அங்கிருந்து இந்தியாவுக்கு தஞ்சம்கோர சென்றிருந்தனர்.
ஆனால், அங்கிருந்து இந்தோனேஷியா செல்ல முனைந்தனர். இந்நிலையில், நேற்றுமுன்தினம் இரவு அவர்களின் படகு பழுதடைந்தது. இதனால், கடலில் தத்தளித்த வெற்றிலைக்கேணி கடற்பரப்பில் இருந்து சுமார் 3.5 கடல் மைல் தொலைவில் கடல் கொந்தளிப்பின் மத்தியிலும் தத்தளித்த அகதிகளை இலங்கை கடற்படை மீட்டது.
இவர்களை, இலங்கை கடற்படையின் உதாரா மற்றும் 04ஆவது விரைவுத் தாக்குதல் கப்பல்கள் சென்று மீட்டன. இவ்வாறு மீட்கப்பட்ட 104 ரொஹிங்கியர்களும் நேற்று காலை கடற்படை முகாமுக்கு பாதுகாப்பாக அழைத்துச் செல்லப்பட்டனர்.
இந்நிலையில், கையில் காயமடைந்த சிறுவன் ஒருவன் உட்பட, சில நாட்கள் உணவு அருந்ததால் பாதிக்கப்பட்ட பெண் உட்பட ஐந்து பேர் அவசர சிகிச்சைக்காக தெல்லிப்பழை ஆதார மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், மீட்கப்பட்ட அகதிகளை ஐ. நா.வின் அகதிகள் ஆணையம் (யு. என். எச். சி. ஆர்.) பிரதிநிதிகள், தெல்லிப்பழை பிரதேச செயலாளர் ஆகியோர் பார்வையிட்டனர்.
தற்போது, கடற்படை முகாகமில் தங்க வைக்கப்பட்டுள்ள அகதிகளை நீதிமன்றத்தில் முற்படுத்திய பின்னர் நீர்கொழும்பில் உள்ள அகதிகள் முகாமுக்கு மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டது.
