தமிழ் மக்களுக்கான தீர்வு பற்றி பேசுவதாயின் தமிழர்களின் விடுதலையை நேசிக்கும் கட்சிகளையும் ஒன்றிணைத்து சர்வதேச நாடுகளின் – இந்தியாவின் அனுசரணையுடன் இலங்கை அரசுடன் பேச வேண்டும் என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கை தமிழரசு கட்சியின் தலைவருமான மாவை சேனாதிராசா தெரிவித்துள்ளார்.
இலங்கை தமிழரசு கட்சியின் 75ஆவது ஆண்டு ஆரம்ப விழா நேற்று கிளிநொச்சி கூட்டுறவு மண்டபத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வுக்கு தலைமை தாங்கி உரையாற்றியபோதே அவர் மேறக்ணடவாறு கூறினார்.
மேலும் தெரிவிக்கையில்,
“இலங்கைக்கு 1948ஆம் ஆண்டு பிரித்தானிய ஏகாதிபத்தியத்திடமிருந்து சுதந்திரம் வழங்கப்பட்டபோதும் தமிழர்களுடைய உரிமைகள் பறிக்கப்பட்டுள்ளன. அதாவது இலங்கையில் தமிழர்கள் ஆட்சி செய்த நிலங்களுக்கு சுதந்திரம் கிடைக்கவில்லை. அது சிங்களவர்களுக்கு கிடைத்துள்ளது.
தமிழ் மக்கள் சுதந்திர தமிழர்களாக இருக்க வேண்டும். இதற்காகவே அன்று 1948ஆம் ஆண்டிலேயே தந்தை செல்வா தனது அகிம்சை வழியிலான போராட்டத்தை ஆரம்பித்திருந்தார்.
நாட்டின் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கட்சி சிதைந்து தேசிய பட்டியலில் நாடாளுமன்றத்துக்கு சென்று பிரதமராகி ஜனாதிபதியாகி இருக்கின்றார். இந்த நிலையில், பேச்சு மூலம் தமிழர்களின் இனப் பிரச்னையை தீர்ப்பதற்கு அழைத்திருக்கின்றார்.
தமிழ் மக்களுடைய விடுதலையை நேசிக்கின்ற ஏனைய கட்சிகளையும் ஒன்றிணைத்து சர்வதேச நாடுகளின் குறிப்பாக இந்தியாவின் அனுசரணையுடன் பேச வேண்டும்” – என்றார்.
