வடமராட்சி கிழக்கு மருதங்கேணி கடற்பரப்பில் கடந்த 17ஆம் திகதி தத்தளித்த ரோஹிங்கியா அகதிகள் படகு துரிதமாக மீட்கப்பட்டதை ஐ.நா மனித உரிமைகள் பேரவை, அகதிகள் அமைப்பு என்பன பாராட்டியுள்ளன.
17ஆம் திகதி மாலை படகில் 105 அகதிகள் வடமராட்சி கிழக்கு கடலில் தத்தளிப்பதை உள்ளூர் மீனவர்கள் கண்டனர். உடனடியாக அவர்கள் கடற்படையினர், கடற்றொழில் நீரியல் வள திணைக்களம் என்பனவற்றிற்கு தகவல் வழங்கினர். அத்துடன், உள்ளூர் மீனவர்களும் அங்கு மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
டிசம்பர் 18 ஆம் திகதி அவர்கள் மீட்கப்பட்டு, காங்கேசன்துறை கடற்படை தளத்தில் தரையிறக்ககப்பட்டனர்.
இச்செயற்பாடு தொடர்பில் ஜ.நாடுகள் அமைப்பு பாராட்டினை வெளியிட்டுள்ளது.
“இலங்கை கடற்படை மற்றும் உயிர்களை காப்பாற்ற செயல்பட்ட உள்ளூர் மீனவர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் நாங்கள் நன்றி கூறுகிறோம்.
கடலில் ஏற்படும் துயரமான உயிரிழப்பைத் தடுக்க உடனடியாகவும் விரைவாகவும் செயல்பட பிராந்தியத்தில் உள்ள அனைத்து நாடுகளும் பின்பற்ற வேண்டிய மனிதகுலத்திற்கு இது ஒரு எடுத்துக்காட்டு.
UNHCR, சட்டக் கடமைகள் மற்றும் மனிதாபிமான மரபுகளுக்கு இணங்க, படகுகளில் தத்தளித்து, துன்பத்தில் இருப்பவர்களைக் காப்பாற்றுமாறு அனைத்துப் பொறுப்புள்ள நாடுகளுக்கும் மீண்டும் வேண்டுகோள் விடுக்கிறோம் என UNHCR இன் ஆசிய மற்றும் பசுபிக் பிராந்தியத்திற்கான பணிப்பாளர் இந்திரிகா ரத்வத்த தெரிவித்துள்ளார்.
