எதிர்வரும் 31ஆம் திகதிக்கு பின்னர் நாட்டில் 10 மணி நேர மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படும். இதனால், நாடு செயலிழக்கக் கூடும் என்று இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர்கள் சங்கத் தலைவர் நிஹால் வீரரத்ன தெரிவித்துள்ளார்.
நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
“31ஆம் திகதியுடன் நாட்டின் நிலக்கரி கையிருப்பு தீர்ந்துவிடும். இதனால், 300 மெகாவோட்ஸ் மின்சாரம் தேசிய மின்கட்டமைப்புக்கு கிடைக்காமல் போகும். நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தை இயக்க வருடத்துக்கு 38 கப்பல் நிலக்கரி தேவை. இலங்கை நிலக்கரி நிறுவனமே நிலக்கரி வழங்கலை செய்து வருகிறது.
இதுவரை 60 ஆயிரம் தொன் – 20 கப்பல் நிலக்கரிக்கு விலை மனு கோரப்பட்டுள்ளது. ஆனால், இதுவரை 5 கப்பல் நிலக்கரியே நாட்டுக்கு வந்துள்ளது. ஆறாவது கப்பல் வருவதற்கு ஓரிரு வாரங்கள் செல்லும்.
எனவே, அடுத்த நிலக்கரி கப்பல் வந்துசேரும்வரை கையிருப்பிலுள்ள நிலக்கரி மூலம் இரு மின்பிறப்பாக்கிகளையே இயக்க முடியும். இதனால், 300 மெகா வோட்ஸ் மின்சாரம் தேசிய கட்டமைப்புக்கு கிடைக்காமல் போகும். எனவே, தற்போது 2 மணித்தியாலம் 20 நிமிடங்கள் நீடிக்கும் மின் துண்டிப்பு இரு மடங்காக நீடிக்கப்பட வேண்டும்.
எனினும், அடுத்த கப்பல் வர மேலும் ஓரிரு வாரம் எடுத்தால், மற்றொரு மின் பிறப்பாக்கியையும் நிறுத்த வேண்டியிருக்கும். இதனால், 10 மணி நேர மின் துண்டிப்பை நடைமுறைப்படுத்த நேரும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
இதேவேளை, தனியார் மின் உற்பத்தி நிலையம் ஒன்று நாட்டை விட்டு வெளியேறியுள்ளது. எந்த உடன்படிக்கை செய்யப்பட்டாலும் 45வீத பங்குகளை பெற்ற இந்தியாவோ அல்லது சீனாவோ நாட்டை ஆட்டம் காண செய்ய முடியும். இதற்கு இடமளிக்காது அதன் அபாயத்தை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும்” எனத் தெரிவித்தார்.
