இனப் பிரச்னை தீர்வுக்கான பேச்சு தொடர்பாக இன்று (21) கலந்துரையாடுவதற்காக தமிழ்த் தேசியக் கட்சிகளை அழைத்துள்ளார் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க.
இலங்கை வந்துள்ள எரிக் சொல்ஹெய்ம் நேற்று முன்தினம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனை சந்தித்துப் பேசினார். நேற்றைய தினம் அவர் ஜனாதிபதியையும் சந்தித்துப் பேசினார். இந்நிலையிலேயே, இந்தத் திடீர் சந்திப்புக்கு தமிழ்த் தேசியக் கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இனப் பிரச்னைக்கு தீர்வு காண்பதற்காக கடந்த நவம்பர் 23ஆம் திகதி நாடாளுமன்றில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அழைப்பு விடுத்திருந்தார். இதற்கு முன்னோடியாகக் கடந்த 13ஆம் திகதி சர்வகட்சி மாநாடும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அழைப்பின்பேரில் நடைபெற்றது.
இந்த நிலையில், இலங்கை வந்துள்ள நோர்வேயின் முன்னாள் விசேட தூதுவரும் சர்வதேச காலநிலை தொடர்பான ஜனாதிபதியின் தற்போதைய ஆலோசகருமான எரிக் சொல்ஹெய்ம் அரசியல் கட்சிகளை அண்மைநாட்களாக சந்தித்து வருகிறார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை தனிப்பட்ட முறையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்துப் பேசிய அவர், நேற்று முன்தினம் திங்கட்கிழமை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன், எம். ஏ. சுமந்திரன் எம். பி. ஆகியோரை சந்தித்து உரையாடினார்.
தொடர்ந்து, நேற்றைய தினம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவையும் எரிக் சொல்ஹெய்ம் சந்தித்துப் பேசினார்.
இந்நிலையிலேயே நேற்றைய தினம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன், தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவர் சி. வி. விக்னேஸ்வரன் ஆகியோருக்கு ஜனாதிபதி தரப்பிலிருந்து இன்று மாலை சந்திப்பு நடைபெறும் என்றும் அதில் பங்கேற்குமாறும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. எனினும், இந்தக் கூட்டம் உத்தியோகப்பற்றற்ற சந்திப்பாகவே நடைபெறும் என்றும் கூறப்பட்டது.
இந்த சந்திப்புக் குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம். ஏ. சுமந்திரன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்களுக்கு அறிவித்துள்ளார்.
எனினும், இந்தச் சந்திப்பில், க. வி. விக்னேஸ்வரன், த. சித்தார்த்தன், செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் பங்கேற்பது தொடர்பில் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. காரணம், இவர்கள் நேற்றுமுன்தினம் இரவே, தமது மாவட்டங்களுக்கு திரும்பியிருந்தனர். இதனால், அவர்கள் கூட்டத்தில் பங்கேற்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
எனினும், இன்று மாலையே சந்திப்பு என்பதால் சிலர் இந்த சந்திப்பில் பங்கேற்கவும் வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டது.
