முயற்சிகளின் மூலமே மனிதர்கள் வெற்றியடைகின்றார்கள். இன்று பல்வேறு வகையான முயற்சியாளர்கள் உருவாகி கொண்டு இருக்கிறார்கள்.
அவ்வகையில் முயற்சியை வெற்றியாக்கி உயர்ந்த முயற்சியாளரின் வெற்றியையும், அழகிய இடத்தையும் உங்கள் முன் கொண்டு வருகின்றோம்.
இன்று பலவகையான பண்ணைகள் யாழ்.குடாநாட்டில் உருவாகி கொண்டு வருகின்றன. அவ்வகையில் விலங்கு பண்ணைகளும் அதிகளவில் உருவாகிக் கொண்டு வருகின்றன.
ஆட்டுப்பண்ணைகளைப் பார்த்திருக்கின்றோம். மாட்டுப்பண்ணைகளைப் பார்த்திருக்கின்றோம். யாழ்ப்பாணத்தில் பன்றிப் பண்ணையைப் பார்த்திருக்கீறீர்களா?
ஆம், இன்று பன்றி பண்ணை கூடாரத்தைப் பற்றித்தான் பார்க்கப் போகின்றோம். வித்தியாசமான சிந்தனை மூலம் உருவான பன்றிப்பண்ணையின் சுவடுகளை உங்கள் முன் சமர்ப்பிக்கின்றோம்.
யாழ்.மாவட்டத்தில் வலி கிழக்குப் பிரதேசத்திற்குட்பட்ட புத்தூர் பகுதியில் இப்பண்ணை அமைந்துள்ளது. புத்தூரில் இருந்து தென்மராட்சி – மீசாலைக்கு செல்கின்ற வீதியில் தண்ணீர்தாங்கிக்கு அண்மையில் உள்ள வீதியில் உள் நுழைந்தால் இப்பண்ணைக்கு செல்ல முடியும்.
சுமார் 1000 பரப்பிற்கு மேற்பட்ட காணியில் இப்பண்ணை கண்ணுக்கு இனிமை தரும் இயற்கையால் சூழப்பட்ட சூழலில் அமைந்து காணப்படுகின்றது.
பரந்த நிலப்பரப்பில் வெட்டவெளியில் பன்றிகள் மேய்ந்து உணவை தேடிப்பெற்றுக்கொள்வதற்கு ஏற்றால் இப்பண்ணை அமைந்து காணப்படுகின்றது.
ஆரம்பத்தில், 10 பன்றிகளுடன் ஆரம்பிக்கப்பட்ட இப்பன்றி பண்ணை இன்று 300 பன்றிகளுடன் பல லட்சம் ரூபா வருமானம் பெறக்கூடிய பண்ணைத் தொழிலாக மாறியுள்ளதாக உரிமையாளர் தெரிவித்தார்.
பன்றிகளை வளர்த்து வெளிமாவட்ட விற்பனையாளர்களுக்கே மொத்தமாக விற்பனை செய்து வருவதாகவும், மொத்த விலைக்கு ஒரு கிலோ கிராம் பன்றி 750 ரூபா வீதம் விற்பனை செய்யப்பட்டு வருவதாகவும் உரிமையாளர் எம்முடன் பகிர்ந்து கொண்டார்.
பன்றிகள் பண்ணையைச் சூழ உள்ள நிலப்பரப்பில் தாமாக சென்று தமது உணவை மேய்வதுடன், தாமும் உணவுகளை வழங்கி வருவதாகவும் தெரிவித்த உரிமையாளர், ஆரம்பத்தில் 10 பன்றிகளை ஐம்பதினாயிரம் ரூபாக்கு வாங்கியதாகவும், இன்று 1 லட்சத்து ஐம்பதினாயிரமாக மாறியுள்ளதாகவும் தெரிவித்தார்.
பன்றிகள் குளிப்பதற்கு குளங்கள் அமைக்கப்பட்டுள்ளதுடன் பல குழாய் நீர் கிணறுகளும் உருவாக்கப்பட்டுள்ளன.
பன்றிகள் எவ்வித தடைகளும் இல்லாது சுகந்திரமாக திரிந்து விளையாடித் திரிவதற்கேற்ற பரந்துபட்ட பட்ட நிலப்பரப்போடு குறித்த பண்ணை அமைந்து காணப்படுவதோடு, மக்கள் குடியிருப்புக்கள் இல்லாது இருப்பதால் எவ்வித பிரச்சனைகளும் இல்லாது பண்ணையானது வளர்ச்சியை நோக்கிப் பயணித்துக் கொண்டிருப்பதை அவதானிக்க கூடியதாக உள்ளது.
பண்ணையைச்சூழ வற்றும் கடற்பரப்புக்களும், சதுப்பு நிலங்களும், வற்றாத நீர் ஊற்றுக்களும் காணப்படுகின்றமை பன்றி வளர்ப்பிற்கு மிகவும் சாதகமாக உள்ளதையும் நோக்கினோம்.
ஒரு பன்றி ஒதடவை 15 தொடக்கம் 17 குட்டிகள் போடும் எனவும், தாம் இப்பன்றிப் பண்ணையை ஆரம்பத்தில் ஆரம்பிக்கும் போது சில தடங்கல்களைச் சந்தித்ததாகவும் இன்று எவ்விதத் தடங்கல்களும் இன்றி சிறப்பாக மேற்க்கொள்ள கூடியதாக உள்ளதாகவும் பெருமிதத்துடன் தெரிவிக்கின்றார் உரிமையாளர்.
குறித்த பன்றி பண்ணையானது தற்போது ஆரம்பிக்கப்பட்டு மூன்று வருடங்களை நெருங்குகின்றது எனக் குறிப்பிட்ட உரிமையாளர் தொடர்ச்சியாக பன்றிபண்ணைய விரிவாக்கம் செய்ய உள்ளதாகவும் தெரிவித்தார்.
வளர்ந்து வரும் நவீன உலகில் பல தொழில்கள் உள்ளபோதும் கிராமக் குடிசைக் கைத்தொழில்கள் அருகி வரும் நிலையில் யாழ்.மண்ணில் இப்படியான ஒரு பன்றிப் பண்ணையின் ஆரம்பமும், வளர்ச்சி பற்றியும் உங்களுடன் பகிர்ந்து கொண்ட மகிழ்வுடன் இவ்வாரம் விடை பெறுகின்றோம்.
