அரசாங்கத்திடம் அனைத்து பொறுப்புகளையும் ஒப்படைத்து அடுத்த தேர்தலில் அதிகாரத்தை பெற முயற்சிக்கும் பாரம்பரிய அரசியல் முறையிலிருந்து விலகி நாட்டுக்கான தார்மீக பொறுப்பை நிறைவேற்ற அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வலியுறுத்தியுள்ளார்.
பணவீக்கம் அதிகரித்துள்ளமையால் ஏற்பட்டுள்ள பொருட்களின் விலையேற்றம் காரணமாக மக்கள் எதிர்நோக்கியுள்ள இக்கட்டான நிலைமையை நாம் மறந்து விடவில்லை. நாட்டின் பொருளாதார பிரச்னைகளை கட்டம்கட்டமாக தீர்த்து அடுத்த வருடம் மக்களுக்கு மேலும் நிவாரணங்கள் வழங்கப்படும் என்று ஜனாதிபதி தெரிவித்தார்.
நுவரெலியா நகர மண்டபத்தில் நேற்று நடைபெற்ற உணவு பாதுகாப்பு தொடர்பான மாவட்ட வேலைத்திட்டத்தின் முன்னேற்ற மீளாய்வு கூட்டத்தில் உரையாற்றும்போதே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மேற்க்கண்டவாறு தெரிவித்தார்.
மேலும், உணவுப் பாதுகாப்பு வேலைத்திட்டத்தை வெற்றியடைய செய்வதற்கு, அரசியலுக்கு அப்பால்பட்டு அனைவரும் ஒன்றிணைய வேண்டும். ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின்னர்தான் அரசியலில் ஈடுபடவில்லை. வாழ்க்கை சுமையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணம் வழங்கி நாட்டின் வீழ்ச்சியடைந்த பொருளாதாரத்தை மீட்டெடுக்க அர்ப்பணிப்புடன் செயற்படுகின்றேன்.
மக்கள் இன்று ஒரு குழுவை அன்றி முழு அரசியல் முறைமையையும் நிராகரித்துள்ளனர். ஒன்றிணைந்து செயல்பட்டு நாட்டை கட்டியெழுப்புவதன் மூலமே மக்களின் நம்பிக்கையை கட்டியெழுப்ப முடியும். விவசாயிகளுக்கு தேவையான உரத்தை வழங்கும் அதேவேளை அடுத்த ஆண்டு பற்றியும் சிந்திக்க வேண்டும். ஏனெனில், இந்த ஆண்டு, பொருளாதார வீழ்ச்சி காரணமாக உணவுப் பற்றாக்குறையை எதிர்நோக்கியிருக்கின்றோம்.
ஆனால், உக்ரைன் போர் காரணமாக அடுத்த ஆண்டு உலகம் முழுவதும் உணவுப் பற்றாக்குறை ஏற்படலாம். அந்த சவாலை நாம் வெற்றி கொள்ள வேண்டும். நாம் ஆரம்பித்துள்ள இந்த உணவுப் பாதுகாப்புத் திட்டத்தை 2023ஆம் ஆண்டு முழுவதும் செயல்படுத்த எதிர்பார்க்கின்றோம். ஏனெனில், இந்த உலகளாவிய நிலைமை காரணமாக உணவுப் பொருட்களின் விலை உயர்ந்து வருகிறது. இந்த நிலையில் அபிவிருத்தியடைந்த நாடுகளால் மட்டுமே அவற்றை வாங்க முடியும். அந்தப் பின்னணியில் இந்தச் செயல்பாடுகளை நாம் வெற்றியடையச் செய்ய வேண்டும்.
இன்று இந்தத் திட்டம் கிராம அளவில் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தை முன்னெடுத்துச் செல்ல நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். ஏதேனும், குறைபாடுகள் இருப்பின் எங்களுக்கு அறிவிக்குமாறு அதிகாரிகளை கேட்டுக்கொள்கிறேன்” எனத் தெரிவித்தார்.
