வங்காளவிரிகுடாவில் புதிதாக தோன்றிய தாழமுக்கம் முல்லைத்தீவுக்கும் திருகோணமலைக்கும் இடையே கரையை கடக்கும். இதனால், குளிரான காலநிலை நிலவும்.
இவ்வாறு யாழ். பல்கலைக்கழக புவியியல்துறை விரிவுரையாளர் கலாநிதி நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில், அவர் தனது பதிவில் மேலும் தெரிவித்தவை வருமாறு,
நேற்று சனிக்கிழமை வங்காள விரிகுடாவில் உருவாகிய தாழமுக்கம் நேற்றிரவு 8 மணியளவில் ஆனையிறவுக்கு மிகச்சரியாக 240 கி. மீற்றர் தூரத்தில் நிலைகொண்டிருந்தது.
இது இன்று அல்லது நாளை முல்லைத்தீவுக்கும் திருகோணமலைக்கும் இடைப்பட்ட பகுதியில் கரையைக் கடக்கும என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தத் தாழமுக்கம் 14 மணி நேரத்துக்கும் மேலாக அசைவற்று இருந்ததால் வலுக் குறைந்து காணப்பட்டது. எனினும், இதன் மூலம் வடக்கு மாகாணத்தின் பல பகுதிகளிலும் இன்று காலை முதல் கன மழை பெய்யும் வாய்ப்புள்ளது.
இதேசமயம், நாளை அதிகாலை தொடக்கம் வடக்கு மாகாணம் முழுவதும் காற்றின் வேகம் அதிகரிக்க தொடங்கும். கரையோரப் பகுதிகளில் காற்றின் வேகம் மணிக்கு 50 தொடக்கம் 60 கி. மீ. வேகத்தில் வீசக்கூடும்.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்தின் கடற்பகுதிகள் கொந்தளிப்பான நிலைமையில் காணப்படும். இதனால், மீனவர்கள் கடலுக்கு செல்வதை தவிர்ப்பது சிறந்தது.
இன்று முதல் வடக்கு மாகாணத்தின் பகல் பொழுது பதிவு செய்யப்படும் நாளின் அதிகூடிய வெப்பநிலை குறைவடையும் என்பதனால் குளிரான வானிலை நிலவக்கூடும்.
