உள்ளூராட்சி சபைத்தேர்தலை கூட்டாக எதிர்கொள்வது தொடர்பில் தமிழரசு, தமிழ் மக்கள் தேசிய கூட்டணி, ரெலோ, புளொட், ஈ. பி. ஆர். எல். எவ். தமிழ்த் தேசியக் கட்சிகளின் தலைவர்கள் ஒன்றாகக் கூடி பேச்சு நடத்தியுள்ளனர்.
இக்கலந்துரையாடல் நேற்று (24) தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான க. வி. விக்னேஸ்வரனின் இல்லத்தில் நடைபெற்றது.
நேற்று மாலை 4.30 மணியளவில் ஆரம்பமான இந்த சந்திப்பு சுமார் ஒன்றரை மணிநேரம் நீடித்தது.
இதில், மிக முக்கியமாக உள்ளூராட்சி தேர்தலை கூட்டாக சந்திப்பது தொடர்பாக ஆராயப்பட்டது. அனைத்துக் கட்சிகளின் தலைவர்களும் ஒன்றாக தேர்தலை சந்திப்பதற்கு விருப்பம் தெரிவித்தனர்.
கூட்டத்தில் பங்கேற்ற இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசாவும் ஒன்றிணைந்து கேட்பதற்கு விருப்பம் தெரிவித்தார். எனினும், கட்சியில் ஏனையவர்களுடன் பேசிவிட்டு முடிவை அறிவிப்பதாகத் தெரிவித்தார்.
இதேசமயம், தமிழரசுக் கட்சி உள்ளூராட்சி சபைத் தேர்தலில் தனித்துப் போட்டியிடுவது தொடர்பில் பரிசீலித்தது. ஆனால், தனித்துப் போட்டியிடுவதைத் தாம் ஏற்றுக்கொள்ளவில்லை என்றும் மாவை சேனாதிராசா தெரிவித்தார்.
ஜனாதிபதியுடன் நடந்த உத்தியோகபூர்வ பேச்சு தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது. இந்தப் பேச்சில் அண்மையில் சுமந்திரன் எம். பி. ஜனாதிபதி தரப்புடன் நடத்திய பேச்சு தொடர்பிலும் பேசப்பட்டது.
மேலும், இனிவரும் காலத்தில் இவ்வாறான தவறுகளை தவிர்த்து, தனிப்பட்ட ரீதியில் பேச்சை முன்னெடுக்காமல் கூட்டாகவும் – கவனமாகவும் பேச்சை கையாள்வது தொடர்பிலும் பேசப்பட்டது.
இந்த சந்திப்பில் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை. சேனாதிராசா, தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவர் க. வி. விக்னேஸ்வரன், ரெலோ தலைவர் செல்வம் அடைக்கலநாதன், புளொட் தலைவர் த. சித்தார்த்தன், தமிழ்த் தேசியக் கட்சியின் என். சிறீகாந்தா, எம். கே. சிவாஜிலிங்கம் ஆகியோர் பங்கேற்றனர்.
