முல்லைத்தீவு கேப்பாபுலவு பாதுகாப்பு படைத்தலைமையகத்துக்கு முன்பாக இன்று காலை (27) கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
போராட்டத்தில் கலந்துகொண்ட மக்கள் “எமது நிலம் எமக்கு வேண்டும்” , “இராணுவமே எமது நிலத்தை விட்டு வெளியேறு”, “எங்கள் சொந்த காணிகளுக்குள் இராணுவ முகாம்கள் வேண்டாம்” போன்ற கோசங்களை எழுப்பியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர் .
கடந்த 2017 மார்ச் மாதம் முதலாம் திகதி எமது கேப்பாபுலவு கிராம மக்களால் இராணுவம் அபகரித்துவைத்துள்ள சொந்த காணிகளை விடுவிக்குமாறு தெரிவித்து கேப்பாபுலவில் அமைந்துள்ள முல்லைத்தீவு பாதுகாப்பு படைத்தலைமையத்திற்கு முன்பாக தொடர் போராட்டம் மேற்க்கொள்ளப்பட்டது .
இந்த போராட்டத்தின் பயனாக இரண்டு கட்டங்களாக கேப்பாபுலவில் காணிகள் படையினரால் விடுவிக்கப்பட்டிருந்த நிலையில் பாடசாலைகள், ஆலயங்கள், விளையாட்டு மைதானம் , பொது மண்டபங்கள், மக்கள் வீடுகள் நிலங்கள் என்பன இன்னும் விடுவிக்கப்படவேண்டிய நிலையில் அங்கு தொடர்ந்தும் படையினர் முல்லைத்தீவு பாதுகாப்பு படைத்தலைமையகத்தை அமைத்து நிலைகொண்டுள்ளனர்.
இந் நிலையில் மீதமாகவுள்ள 54 குடும்பங்களுக்கு சொந்தமான 71 ஏக்கர் தமது சொந்த குடியிருப்பு நிலங்களை படையினர் விட்டு வெளியேற வேண்டும்.
போர் முடிந்து 14 வருடங்கள் ஆகின்ற போதிலும் நாங்கள் அகதி வாழ்க்கையே வாழுகின்றோம் . புதிதாக பொறுப்பேற்றுள்ள ஜனாதிபதி கேப்பாபுலவு மக்களின் இந்த பிரச்சனைக்கு உரிய தீர்வை வழங்க வேண்டும் காணி விடுவிப்பு தொடர்பிலும் அரசியல் தீர்வு தொடர்பிலும் பேசி வருவதாக நாம் அறிகின்றோம் . ஆகவே எமது சொந்த நிலங்களுக்கு நாம் திரும்பி செல்வது தொடர்பிலும் அந்த காணிகளில் உள்ள இராணுவ முகாம்களை அகற்றுவது தொடர்பிலும் அரசு உரிய கவனம் செலுத்த வேண்டும் என்றும் சர்வதேசம் இனியும் தாமதியாது கேப்பாபுலவு மக்களின் இந்த துயரை துடைக்க ஆவன செய்யவேண்டும் எனவும் போராட்டத்தில் பங்கு மக்கள் கருத்து தெரிவித்தனர்.
இவ் கவனயீர்ப்பு போராட்டத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் , புதுக்குடியிருப்பு பிரதேச சபை உறுப்பினர்களான ஆறுமுகம் ஜோன்சன் , விஜயகுமார் மற்றும் மக்கள் எனப் பலர் கலந்து கொண்டிருந்தனர். கலந்துகொண்டிருந்தனர்.
