உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலை ஒரு வருடத்துக்கு பிற்போடுவது தொடர்பில் நேற்றைய தினம் அரச தரப்புகள் நடத்திய கலந்துரையாடலில் ஆராயப்பட்டுள்ளதாக தென்னிலங்கை உயர்மட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தேர்தலுக்காக பெரும் தொகை நிதி செலவிடும் போது, அது அரச வருமானத்தை நேரடியாக பாதித்து விடும். இதனால் மீண்டும் நாட்டில் பொருளாதாரம் வீழ்ச்சி ஏற்பட்டால் கட்டியெழுப்புவது என்பது கடினமாகிவிடும் என்று இதன்போது கருத்துக்கள் வெளியிடப்பட்டதாகத் தெரிய வருகிறது.
நிதி அமைச்சில் நடந்த இந்தக் கலந்துரையாடல் குறித்து அரசாங்க முக்கியஸ்தர் ஒருவர் கருத்து தெரிவிக்கையில்,
“உள்ளூராட்சி மன்ற தேர்தலை மீண்டும் ஒரு வருடத்திற்கு ஒத்திவைப்பது சிறந்ததாக கலந்துரையாடலின் போது கருதப்பட்டது. வரலாறு காணாத படுமோசமான பொருளாதார நெருக்கடியை நாடு தற்போது எதிர்க்கொண்டுள்ளது.
அரச வருமானமானது, அரச ஊழியர்களின் ஊதியம், ஓய்வூதியம் மற்றும் சமுர்தி கொடுப்பணவுகளுக்கே போதுமானதாக உள்ளது. எனவே, இவ்வாறானதொரு நெருக்கடியான நிலமையில் தேர்தலொன்றுக்கு செல்வதானது நாட்டை மேலும் பாதாளத்தில் தள்ளிவிடும்.
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்காக பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. அடுத்த வருடம் மார்ச் மாதம் அளவில் இதன் பலன்களைப் பெற்றுக்கொள்ள முடியும்.
இவ்வாறானதொரு நிலைமையில் தேர்தல் ஒன்றுக்கு நிதி ஒதுக்கீடு செய்வது ஏற்புடையதல்ல. அவ்வாறு நிதி ஒதுக்கும் பட்சத்தில் கடந்த 6 மாத காலமாக நாட்டின் நிதி நெருக்கடியை தீர்க்க முன்னெடுக்கப்பட்ட முயற்சிகள் மற்றும் திட்டங்கள் கூட பயனற்றதாகி விடும். இதனால் நாட்டில் பொருளாதாரத்துக்கே பாதிப்பும் ஏற்படும்.
எனவே, தேர்தலுக்காக பெரும் தொகை செலவிடும் போது அரச வருமானத்தை நேரடியாகப் பாதிக்கும். மீண்டும் நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சி கண்டால் கட்டியெழுப்புவது என்பது கடினமாகி விடும்.
அதே போன்று அடுத்த வருடம் மார்ச் மாதமளவில் சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்புகளும் இலங்கைக்கு கிடைக்கும். மேலும் புதிய வரி கொள்கை ஊடாக அரச வருமானம் அதிகரிக்கும். இதன் போது நாட்டின் பொருளாதாரத்துக்கு தாக்கம் ஏற்படாதவாறு தேர்தலை நடத்த முடியும்” என்றார்.
