இனப் பிரச்னைக்கான தீர்வை பெற்று தருவார்கள் என்று தமிழ் கட்சிகளின் தலைவர்களிடம் எதிர்பார்க்க முடியாது என்று தெரிவித்திருக்கிறார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ். வினோ நோகராதலிங்கம்.
கூட்டமைப்பு விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனால் உருவாக்கப்பட்டது. அதை பலவீனப்படுத்த வேண்டும் என்று சிலர் செயல்படுகின்றனர் என்றும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
சமத்துவ கட்சியின் வன்னி தலைமை பணிமனை திறப்பு விழா நேற்று வவுனியாவில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் பங்கேற்று பேசியபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தனது உரையில் தெரிவித்தவை வருமாறு,
கூட்டமைப்புக்கு கிளிநொச்சியில் போட்டி சமத்துவக் கட்சி மட்டுமே. சமத்துவக் கட்சி ஏன் கூட்டமைப்போடு இணைந்து செயல்பட முடியாது?
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக செயல்படுவோர் எல்லோரும் ஒவ்வொரு கட்சி. எங்களிடம் ஒற்றுமை இல்லை. எமது கட்சிகள் சுயலாபத்துடன் செயல்பட நினைக்கிறார்கள். சிலர் நினைக்கிறார்கள் எல்லோரும் இணையப் போகிறார்கள் என்று. நிச்சயம் நாம் இணையப் போவதில்லை.
இனப் பிரச்னை தீர்வை தமிழ் கட்சிகளின் தலைவர்களிடம் எதிர்பார்க்க முடியாது. நாம் மாகாண சபையை கேட்க ஒரு கட்சி அதற்கு எதிராகப் பல கொடிகளை பரப்பி எழுச்சி ஊர்வலம் நடத்துகிறது. இப்படி நடக்கையில் சிங்கள கட்சிகள் தீர்வை தருமா?
ஒரு கட்சி மாகாண சபை வேண்டும் என்கிறது. மற்றொரு தரப்பு வேண்டாம் என்கிறது. இப்படி இருக்கும்போது நாம் எப்படி தீர்வைத் தருமாறு கேட்கிறார்கள். எமக்கு தீர்வு தரக்கூடாது என்று சிங்கள தரப்புகள் அனைத்தும் ஒன்றுபடும்.
ஆனால், எங்களுக்கு தீர்வு தேவை. நாம் ஒன்றுபடப்போவதில்லை. நான் கூட்டமைப்பை பலப்படுத்தவே விமர்சிக்கிறேன். விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனால் உருவாக்கப்பட்டது கூட்டமைப்பு. அதை பலவீனப்படுத்த வேண்டும் என்று சிலர் செயல்படுகின்றனர். கூட்டமைப்பு பலவீனப்படுவதை அவர்கள் விரும்புகின்றனர்.
உள்ளூராட்சி தேர்தலில் தனித்து போட்டியிட போகின்றனராம் தமிழரசுக் கட்சியினர். விரும்பினால் போகட்டும். அவர்களுக்கு அக்கறை இல்லை. அக்கறை இருந்தால் கூட்டமைப்பாகவே இருக்க வேண்டும். தமிழ்த் தலைவர்கள் ஒருபோதும் தீர்வைப் பெற்றுத் தரமாட்டார்கள். இப்போது இருக்கும் தலைவர்களால் அது முடியாது. தமிழர் தரப்பு ஒரு தரப்பாக அரசுடன் பேச வேண்டும். அந்தப் பேச்சுத்தான் வெற்றியளிக்கும் – என்றார்.
