யாழ்ப்பாணம் மாநகர சபையின் முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் இன்று சனிக்கிழமை முதல் தனது பதவியிலிருந்து விலகுவதாக உள்ளூராட்சி ஆணையாளருக்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளார்.
வருடத்தின் இறுதிநாளான இன்று வி. மணிவண்ணன் பதவி விலகுகின்றமையால், புதிய முதல்வர் ஜனவரியிலேயே – புதிய ஆண்டிலேயே பதவியேற்பார். இதனால், அவர் பதவியேற்றாலும் வரவு – செலவு திட்டத்தை சபைக்கு சமர்ப்பிக்க முடியாது. இதனால், அவர் அனைத்து வரவு – செலவுகளையும் முடிவுகளையும் சபையின் அனுமதியை பெற்றே செயல்பட முடியும். இது யாழ். மாநகரின் ஆட்சியில் குழப்பமான – நிச்சயமற்ற நிலையை ஏற்படுத்தும் என்று தெரிய வருகிறது.
45 உறுப்பினர்களைக் கொண்ட யாழ். மாநகர சபையில் அதிக உறுப்பினர்களைகொண்ட (16 உறுப்பினர்கள்) தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 2018இல் ஆட்சியமைத்தது. முதல்வராக இ. ஆர்னல்ட் பதவி வகித்திருந்தார். 2020ஆம் ஆண்டு அவரின் இரண்டாவது வரவு – செலவு திட்டம் தோற்கடிக்கப்பட்டது. இதையடுத்து அவர் பதவியிழந்தார். இதையடுத்து, தமிழத் தேசிய மக்கள் முன்னணியின் சார்பில் தெரிவான வி. மணிவண்ணன் ஈ. பி. டி. பி. கட்சியின் ஆதரவுடன் முதல்வராகக் கடந்த 2020 டிசெம்பர் மாதம் பதவியேற்றார்.
இவர் இரண்டாவதாக சமர்ப்பித்த வரவு – செலவு திட்டம் முதல் சமர்ப்பிப்பிலேயே – கடந்த 24 ஆம் திகதி தோல்வியை தழுவியது. இந்த நிலையில், 14 நாட்களுக்குள் அவர் வரவு – செலவு திட்டத்தின் இரண்டாவது சமர்ப்பிப்பை சபைக்கு சமர்ப்பித்திருக்க வேண்டும். எனினும், அவர் இந்த ஆண்டு முடிவடைவதற்குள் – அதாவது டிசெம்பர் 31ஆம் திகதிக்கு முன்னர் வரவு – செலவு திட்டத்தை சமர்ப்பித்திருக்க வேண்டும். ஏனெனில், புதிய ஆண்டு தொடங்கினால் வரவு – செலவு திட்டத்தை சமர்ப்பிக்க முடியாது என்ற சட்டவிதியே இதற்குக் காரணம். புதிய ஆண்டுக்குள் வரவு – செலவு திட்டம் நிறைவேற்றப்படாதுவிட்டால், ஒவ்வொரு விடயத்தையும் மாநகர முதல்வர் – சபையின் அனுமதியை அல்லது ஆளுநரின் (மாகாண சபை இல்லாமையால்) அனுமதியை பெற்றே செயல்பட நேரும்.
இந்நிலையிலேயே, யாழ். மாநகர சபையை சிக்கலுக்குள் தள்ளி – இன்று சனிக்கிழமை – டிசெம்பர் 31ஆம் திகதி முதல் மணிவண்ணன் தனது பதவியை துறந்துள்ளார்.
இதனிடையே, இரண்டாவது முதல்வர் பதவியை துறந்ததால் யாழ். மாநகர சபை கலையும் என்று தகவல்கள் பரவி வருகின்றது. ஆனால், அது தவறான கருத்து என்று யாழ். மாநகர முன்னாள் ஆணையாளரும் வடக்கு மாகாண சபையின் சீ. வீ. கே. சிவஞானம் தெரிவித்துள்ளார்.
தோற்கடிக்கப்பட்டது வி. மணிவண்ணன் சமர்ப்பித்த இரண்டாவது வரவு – செலவு திட்டமே. அவர் இரு ஆண்டுகள் பதவி வகித்துவிட்டார். எனவே, முதல்வர் தெரிவே நடத்தப்பட வேண்டும். இவரே இரண்டாவது முதல்வராக கருதப்படுவார். அவர் சபைக்கு முன்வைக்கும் சமர்ப்பணங்கள் தோற்கடிக்கும்போது – பதவி துறக்கும் பட்சத்திலேயே சபையும் கலைக்கப்பட்டதாகக் கருதப்படும். உள்ளூராட்சி சட்ட ஏற்பாடு 66 பி-4 இதையே கூறுகிறது – என்று அவர் மேலும் தெரிவித்தார்.
