நாட்டில் மூளைசாலிகள் வெளியேற்றம் மிக வேகமாக அதிகரித்துள்ளதாகவும், நாட்டை விட்டு வெளியேறத் தயாராக இருக்கும் புத்திஜீவிகளை நாட்டை விட்டு வெளியேற வேண்டாம் என எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ அறைகூவல் விடுத்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“தற்போதைய சூழ்நிலையில் இருந்து நாட்டை மீட்டெடுக்க இருளில் இருந்து வெளிப்படும் வெளிச்சக் கோடு போன்று 220 இலட்சம் மக்களின் கூட்டு மனப்பான்மை முக்கியமானது.
பிரபஞ்சம் வேலைதிட்டத்தின் மிக முக்கியமான அம்சம், நாட்டின் கல்வித்துறையை வலுப்படுத்துவதே எனவும், எந்தவொரு நாட்டின் முன்னேற்றத்திற்கும் இது ஒரு அம்சமாக இருந்தாலும், உலக சவால்களுக்கு ஈடுகொடுக்க முடியாத காலத்திற்கு பொருந்தாத, பின்தங்கிய கல்வி முறையே நம் நாட்டில் நடைமுறையில் உள்ளதாகவும், இது துரதிஷ்ட நிலை எனவும், இந்த சவால்களைப் புரிந்து கொண்டு கல்வித்துறையில் பாரிய புரட்சியை ஏற்படுத்த வேண்டும்.
ஒருபுறம் கொரோனா வைரஸால் நாடு ஸ்தம்பிதமான நிலையில், ஆட்சியாளர்களின் ஊழல் மற்றும் மோசடியால் நாடு மேலும் வங்குரோத்தாகியுள்ளது. அத்தகைய வங்குரோத்து நாடு Sri Lanka First என்ற தொலைநோக்கின் ஊடாகவே முன்னேற முடியும். இலங்கையை உலகில் முதல் ஸ்தானத்திற்கு கொண்டு வருவதே இந்த திட்டத்தின் இலக்காகும். இதற்கு ஸ்மார்ட் குடிமக்கள், ஸ்மார்ட் இளையோர்கள், ஸ்மார்ட் பாடசாலை மாணவ மாணவிகள் குழுவொன்றை உருவாக்க வேண்டும். இது தேசிய முக்கியத்துவம் வாய்ந்த வேலைத்திட்டமாகும்.
இதன் மூலம் அறிவை மையமாகக் கொண்ட பொருளாதாரத்தை உருவாக்கி, உலக தொழிலாளர் சந்தையின் தேவைக்கு ஏற்ப விநியோகத்தை வழங்கும் மனித வளத்தை உருவாக்க முடியும்.
இதற்காக, ஆங்கில மொழியை மையமாகக் கொண்ட கல்வி போலவே, ஆங்கில மொழி எழுத்தறிவைப் பயிற்றுவித்து, நாட்டின் அனைத்துப் பாடசாலைகளிலும் ஆங்கில மொழி மையங்கள் ஏற்படுத்தப்பட வேண்டும்.
பசுமைப் பொருளாதாரம், கடல் வளத்தை மையமாகக் கொண்ட நீலப் பொருளாதாரம் உருவாக்கப்பட வேண்டும். நீலப் பொருளாதாராம் கடலுக்குள்ளும் மற்றும் சமுத்திரங்களுக்குள்ளும் மீன்பிடிப்பு, கடல் அலையில் இருந்து மின்சார உற்பத்தி, கடலுக்கு அடியில் உள்ள கனிம வளங்களை அகழ்ந்து எடுத்தல், கடல் தாவர உயிரினங்களில் இருந்து மருந்துப் பொருட்களைத் தயாரிக்க அனுமதி அளித்தல், கடல் சேவைத் துறை உள்ளிட்ட 13 வகை தொழில் திட்டங்களை இதுவரை உருவாக்கியுள்ளது.
இது வெறும் வார்த்தைகளுக்கு மட்டுப்படுத்தப்படாமல் நடைமுறையில் அமுல்படுத்தப்பட வேண்டும். எதிர்க்கட்சித் தலைவர் வீம்புக்காக பேசுபவர்களை விட, அடைவுகளைப் பெற்றுத்தரும் பணிகளைச் செய்யக்கூடிய நிபுனத்துவம், திறமை, ஆற்றல் கொண்டவர்களிடம் நாட்டை ஒப்படைக்க வேண்டும” என்றார்.
