இனப் பிரச்னைக்கான தீர்வு பேச்சு தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரை இன்று (05) மாலை சந்திப்பு ஒன்றுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அழைப்பு விடுத்துள்ளார்.
இந்த சந்திப்பில் பங்கேற்குமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளான ரெலோவின் செல்வம் அடைக்கலநாதன், புளொட்டின் த. சித்தார்த்தன் ஆகியோருக்கும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நேரடியாக தொலைபேசி மூலம் அழைப்பு விடுத்துள்ளார் என்று அறிய வருகின்றது.
இனப் பிரச்னை தீர்வுக்கான பேச்சு எதிர்வரும் 10ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. இந்தப் பேச்சு தொடர்பான முன்னாயத்த நடவடிக்கையாகவே இந்த சந்திப்பு ஜனாதிபதி செயலகத்தில் இன்று மாலை 5 மணிக்கு நடைபெறவுள்ளது.
சர்வ கட்சி சந்திப்பின் பின்னர் கடந்த டிசெம்பர் 21ஆம் திகதி தமிழ்த் தேசியத் தரப்பு கட்சிகளை ஜனாதிபதி சந்தித்தார். இந்த சந்திப்புக்கான அழைப்பை பங்காளிக் கட்சிகளான புளொட், ரெலோவுக்கும் மற்றும் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் விக்னேஸ்வரன் எம். பிக்கும் சுமந்திரன் எம். பியே விடுத்தார்.
போதிய அவகாசம் இல்லாத அதேசமயம், தமக்கு உத்தியோகபூர்வமாக அழைப்பு விடுக்கப்படாதது குறித்து அன்றைய தினம் மாலை விக்னேஸ்வரன் எம். பி. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு கடிதம் ஒன்றை எழுதியிருந்தார்.
இந்த நிலையிலேயே இன்றைய சந்திப்புக்கு தமிழ்த் தேசிய கட்சிகளின் சகல தலைவர்களுக்கும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவே நேரடியாக அழைப்பை விடுத்துள்ளார்.
இன்றைய சந்திப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன், எம். ஏ. சுமந்திரன், செல்வம் அடைக்கலநாதன், த. சித்தார்த்தன் ஆகியோர் பங்குபற்றுவர். க. வி. விக்னேஸ்வரன் இந்தியா சென்றுள்ளமையால் இந்த சந்திப்பில் பங்கேற்க மாட்டார் என்றும் அறிய முடிகிறது.
இதேவேளை, இன்றைய சந்திப்பில் அரச தரப்பில் அமைச்சர்கள் டக்ளஸ் தேவானந்தா, விஜயதாஸ ராஜபக்ஷ, வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி ஆகியோரும் பங்கேற்பர் என்று கூறப்படுகின்றது.
