தமிழ்த் தேசிய இனப் பிரச்னைக்கான எந்தவொரு நிரந்தர அரசியல் தீர்வுக்கும் சர்வதேச கண்காணிப்பில் பொது வாக்கெடுப்பின் மூலம் தமிழ் மக்களின் ஆணையைப் பெற வேண்டும்.
இதில் சர்வதேசத்தால் அங்கீகரிக்கப்பட்ட இனப் பிரச்னைக்கான தீர்வுகள் தெரிவுகளாக உள்ளடக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தி மதத் தலைவர்கள், பாதிக்கப்பட்ட தரப்புகள், பல்கலைக்கழக மாணவர்களின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இனப் பிரச்னை தீர்வுக்கான பேச்சு தொடர்பில் தமது நிலைப்பாட்டை வெளிப்படுத்தி அவர்கள் வெளியிட்டுள்ள கூட்டு அறிக்கையிலேயே மேற்குறித்த விடயம் வலியுறுத்தப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
“இலங்கைத் தீவின் வடக்கு – கிழக்கு மாகாணங்களை தமது தாயகமாகக் கொண்டு வாழும் தமிழ் மக்களின் தேசிய இனப்பிரச்னை தொடர்பான பேச்சு தமிழ் அரசியல் தரப்பினருக்கும் அரசாங்கத்துக்கும் இடையே நடைபெறுவதற்கான முன்னேற்பாடுகள் நடைபெறுவதை அறிகின்றோம்.
எமது அரசியல் உரிமைகளை மீட்டு எடுப்பதற்காக மிகப்பெரும் விலைகளைக் கொடுத்து நிற்கும் எமது இனத்தின் அரசியல் தலைவிதியைத் தீர்மானிக்கும் பொறுப்பில் இருக்கும் அனைவருக்கும் பெரும் வரலாற்று பொறுப்பு உள்ளது என்பதுடன் அந்தப் பொறுப்பை அவர்கள் சரியான முறையில் கையாளுவார்கள் என்று நம்புகின்றோம்.
அத்தகைய நம்பிக்கையுடன், பேச்சில் ஈடுபடவுள்ள தமிழ்த் தரப்பினரின் பிரதிநிதிகள், எங்களுடைய நிலைப்பாட்டை வலுவாக முன்வைக்க வேண்டும் என்று எதிர்பார்க்கின்றோம்.
எந்தவோர் உத்தியோகபூர்வமான பேச்சுகளும் ஆரம்பிக்க முன்னர், வட – கிழக்கில் இராணுவ பலத்தை தற்போதைய மட்டத்தில் 25 வீதத்தாலாவது குறைத்து, தமிழ் மக்களின் பூர்வீகக் காணிகளை உரிய சட்டபூர்வமான உரிமையாளர்களிடம் ஒப்படைப்பதன் மூலம் அரசானது தனது நல்லெண்ணத்தை வெளிப்படுத்த வேண்டும். எந்த உடன்பாடும் எட்டப்படுவதற்கு முன், வட, கிழக்கின் இராணுவ எண்ணிக்கை 1983க்கு முந்தைய நிலைக்குக் குறைக்கப்பட வேண்டும்.
வடக்கு – கிழக்கு வாழ் தமிழ் மக்களின் உடனடி பிரச்னையான இராணுவ மயமாக்கலைக் குறைத்து இலங்கை அரசு ஒரு நல்லெண்ண சமிக்ஞையை வெளிப்படுத்தாதவிடத்து பேச்சை முன்னெடுப்பது அர்த்தமற்றது என்பதையும் வலியுறுத்த விரும்புகின்றோம்.
தமிழ்த் தேசிய இனப்பிரச்னைக்கான எந்தவொரு நிரந்தர அரசியல் தீர்வுக்கும், சர்வதேசத்தால் கண்காணிப்பின்கீழ் பொது வாக்கெடுப்பின் மூலம் தமிழ் மக்களின் ஆணையைப் பெற வேண்டும். இதில் சர்வதேசத்தால் அங்கீகரிக்கப்பட்ட இனப்பிரச்னைக்கான தீர்வுகள் தெரிவுகளாக உள்ளடக்கப்பட வேண்டும். இந்த அடிப்படையிலேயே எந்த முன்னெடுப்புகளும் மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற எமது நிலைப்பாட்டை வெளிப்படுத்துகின்றோம் போன்ற கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
இந்த அறிக்கையில், நல்லை ஆதின முதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள், வண. பிதா. ஜோசப் மேரி (எஸ். ஜே) – மட்டக்களப்பு, தென்கயிலை ஆதின முதல்வர் தவத்திரு அகத்தியர் அடிகளார், வண. பிதா கந்தையா ஜெகதாஸ் – மட்டக்களப்பு, சிவகுரு ஆதீன முதல்வர் தவத்திரு வேலன் சுவாமிகள், வண. பிதா செபமாலை பிரின்சன் – மட்டக்களப்பு, வண. பிதா ரொபேர்ட் சசிகரன் – யாழ்ப்பாணம், வடக்கு, கிழக்கு காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்க தலைவி – திருமதி யோ. கனகரஞ்சினி, குரலற்றவர்களின் குரல் அமைப்பின் அமைப்பாளர் ம. கோமகன், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய தலைவர் அ. விஜயகுமார், கிழக்கு பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் – கலை, கலாசார பீட தலைவர் நி. தர்சன் ஆகியோர் கையொப்பம் இட்டுள்ளனர்.
