தனது பதவி விலகல் கடிதத்தை ஆளுநர் ஏற்றுக்கொள்ளாமல் விட்டால் மீண்டும் முதல்வர் பதவியை தொடர்வது பற்றி மணிவண்ணன் பரிசீலிக்க தயாராக உள்ளாராம் என்று மணிவண்ணன் தரப்பினர் குறிப்பிட்டுள்ளனர்.
நேற்று வடக்கு மாகாண ஆளுநரின் அலுவலகத்தில் நடந்த சந்திப்பிலேயே அவர்கள் இதனைத் தெரிவித்தனர்.
யாழ். மாநகர சபையின் வரவு – செலவு திட்டம் தோற்கடிக்கப்பட்டமையை தொடர்ந்து முதல்வர் மணிவண்ணன் பதவி விலகல் கடிதத்தை ஆளுநரிடம் அனுப்பி வைத்தார்.
இந்நிலையில், இரண்டாவது முதல்வரின் வரவு – செலவு திட்டம் தோற்கடிக்கப்பட்டமையால் அவர் பதவி விலகியதைத் தொடர்ந்து மாநகர சபை கலையும் என்று குழப்பம் நீடிக்கிறது. இது தொடர்பில் சட்டமா அதிபரின் ஆலோசனையும் கோரப்பட்டுள்ளது.
இந்நிலையில், யாழ். மாநகர சபையின் குழப்பங்களை தீர்க்கும் நோக்கில் வடக்கு ஆளுநர் ஜீவன் தியாகராஜா தனது செயலாளர் ஊடாக மாநகர சபையினரை அழைத்திருந்தார். நேற்று நடந்த இந்த சந்திப்பில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஈ. பி. டி. பி. கட்சியின் உறுப்பினர்கள் பங்கேற்கவில்லை.
அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் சில உறுப்பினர்கள் தமது கருத்தை வெளியிட்ட பின்னர் அங்கிருந்து சென்றனர். இந்நிலையில், மணிவண்ணன் அணியினர், ஐக்கிய தேசியக் கட்சி, சிறீ லங்கா சுதந்திரக் கட்சி, தமிழர் விடுதலை கூட்டணி ஆகியவற்றின் உறுப்பினர்கள் சந்திப்பில் கலந்து கொண்டனர்.
ஆளுநரின் செயலாளரின் தலைமையில் நடந்த இந்த சந்திப்பில் மணிவண்ணன் தரப்பினர் 3 விடயங்களை முன்வைத்தனர். உள்ளூராட்சி விதிகளின் அடிப்படையில் யாழ். மாநகர சபைக்கு புதிய முதல்வர் தெரிவு மேற்கொள்ளப்பட முடியாது. அப்படி நடந்தால், அந்த நடவடிக்கையை எதிர்ப்போம்,
யாழ். மாநகர சபையை வடக்கு ஆளுநர் தனக்கு இருக்கும் அதிகாரத்தின் அடிப்படையில் கலைக்கலாம், தற்போதைய சபை தொடர வேண்டுமென ஆளுநர் விரும்பினால், வி. மணிவண்ணன் அனுப்பிய பதவி விலகல் கடிதத்தை ஏற்கவில்லை – 14 நாட்களுக்குள் புதிய வரவு – செலவு திட்டத்தை சமர்ப்பித்து நிறைவேற்றுங்கள் என்று ஆளுநர் கூறினால், முதல்வர் பதவியில் தொடர்வது குறித்து மணிவண்ணன் சாதகமாக பரிசீலிப்பார் – என்று தெரிவித்தனர்.
