ஜனாதிபதியுடனான கடந்த பேச்சின் (டிசெம்பர் 21) பின்னர் முன்னேற்றங்கள் குறைவு. போதுமான முன்னேற்றங்கள் நேரகாலத்தில் மேற்கொள்ளாவிட்டால் நாங்கள் பேச்சில் பங்கேற்பது பற்றி யோசிக்க வேண்டியிருக்கும் – என்று தாம் தெரிவித்துள்ளதாக எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் கூறியுள்ளார்.
இதேபோன்று, அரசியல் கைதிகள், காணி விடுவிப்பு குறித்து கடந்த பேச்சுகளில் பேசியவற்றையே மீண்டும் பேசுகிறார்கள். 10ஆம் திகதி சந்திப்பிலும் இதேநிலைமை நீடித்தால் – முன்னேற்றம் இல்லை என்றால் நாம் தொடர்ந்து பேச்சில் பங்கேற்பது குறித்துத் தீர்மானம் எடுக்க வேண்டியிருக்கும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம். ஏ. சுமந்திரன் எம். பி. தெரிவித்துள்ளார்.
நேற்று வியாழக்கிழமை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அழைப்பின் பேரில் இனப் பிரச்னைக்கான தீர்வுப் பேச்சுக்கான முன்னாயத்த சந்திப்பு நடைபெற்றது.
இந்த சந்திப்பு தொடர்பாக சம்பந்தன், சுமந்திரன் ஆகியோரிடம் கேட்டபோதே மேற்கண்டவாறு அவர்கள் தெரிவித்தனர்.
அத்துடன், “ கடந்த சந்திப்புக்கும் இன்றைய சந்திப்புக்கும் இடையில் முன்னேற்றங்கள் குறைவாகக் காணப்படுகின்றன. நிலைப்பாட்டில் உறுதியில்லாமல் எல்லா விடயங்களும் ஸ்தம்பிதமாகியுள்ளன.
இந்த நிலையில் பயணித்தால் கடந்த காலங்களைப் போலவே இந்தப் பேச்சுகளும் போகும் நிலை ஏற்படலாம். அவ்வாறு நீங்கள் விரும்பினால் ஒன்றுமே நடக்காது. நாங்கள் தீர்க்கமான முடிவு எடுக்க வேண்டிய நிலை ஏற்படும் என்று ஜனாதிபதிக்கு கூறியுள்ளேன்.
75 வருடங்களாக இந்தப் பிரச்னையை தீர்க்கமால் இழுத்தடித்துக் கொண்டு போகிறீர்கள். நாம் ஏமாந்துள்ளோம். இது சரிவராது. தேவையான முன்னேற்றங்கள் நேரகாலத்துக்கு ஏற்படாவிட்டால் பேச்சுகளில் நாங்கள் பங்கேற்பது தொடர்பில் யோசிக்க வேண்டியிருக்கும் – விரைவில் ஒரு முடிவு எடுக்க வேண்டியிருக்கும் என்றும் ஜனாதிபதிக்கு சுட்டிக்காட்டியுள்ளேன்”, என்று இரா. சம்பந்தன் தெரிவித்தார்.
சுமந்திரன் எம். பி. தெரிவிக்கையில், “சந்திப்பு நன்றாக இல்லை – ஒரு முன்னேற்றமும் இல்லை. 10ஆம் திகதி பிரச்னை தீர்வுக்கான பேச்சு ஆரம்பமாகும். இதன்போது, உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டிய விடயங்கள் தொடர்பான பட்டியலை தருமாறு ஜனாதிபதி கோரியுள்ளார். நான் தருவதாகக் கூறியுள்ளேன்.
13 ஆம் திருத்தத்துக்கு அப்பால் செல்வது அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வு சமஷ்டி கட்டமைப்பு ஆகிய எமது கோரிக்கைகள் சம்பந்தமாக என்ன விடயம் செய்ய வேண்டும் என்பது குறித்தும் நாம் அறிக்கையிடவுள்ளோம். இந்த 2 விடயங்களும் 10 ஆம் திகதி கூட்டத்திலே முன்னெடுக்கப்படும் என்று சொல்லப்பட்டிருக்கிறது.
அரசியல் கைதிகளின் விடுதலை, காணி விடுவிப்பு தொடர்பில் முன்னர் (டிசெம்பர் 21 சந்திப்பில்) கூறியவற்றையே திரும்பத் திரும்ப சொல்கிறார்கள். உடனடியாக செய்யப்பட வேண்டிய விடயங்கள் தொடர்பில் எந்த முன்னேற்றமும் காணப்படவில்லை. 10ஆம் திகதி பேச்சின்போது நாம் எமது நிலைப்பாட்டை தெளிவுபடுத்துவோம். இனியும் முன்னேற்றம் இல்லை என்றால் நாம் தொடர்ந்து பேச்சில் பங்கேற்பது தொடர்பில் ஒரு தீர்மானம் எடுக்க வேண்டியிருக்கும் – என்றார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடனான இந்தப் பேச்சில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில், அதன் தலைவர் இரா. சம்பந்தன், பங்காளி கட்சிகளான புளொட்டின் தலைவர் த. சித்தார்த்தன், ரெலோவின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் மற்றும் பேச்சாளர் எம். ஏ. சுமந்திரன் ஆகியோர் பங்கேற்றனர்.
அரச தரப்பில் ஜனாதிபதியுடன், பிரதமர் தினேஷ் குணவர்த்தன, நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ, கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோர் கலந்துகொண்டனர்.
