உள்ளூராட்சி சபைத் தேர்தலில் தமிழரசுகட்சி தனித்து போட்டியிட்டால் அது மிகவும் கவலைக்குரிய விடயம் என முன்னாள் மாகாணசபை உறுப்பினர் கஜதீபன் தெரிவித்தார்.
அவர் எமது இணையத்தளத்திற்கு கருத்து தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“உள்ளூராட்சி தேர்தலில் தமிழரசுகட்சி தனித்துப் போட்டியிடப்போவதாக செய்திகள் மூலம் அறிகின்றோம்.
அவ்வாறு நடந்தால் அது மிகவும் கவலைக்குரிய – வேதனைக்குரிய விடயமாகும். தமிழர்களுடைய பிரச்சனைகளை தீர்ப்பதற்கான முக்கிய பேச்சுக்களில் கூட்டமைப்பாக பங்கு பற்றி வருகின்றோம்.
அந்நடவடிக்கையை குழப்பும் செயற்பாடாகவும் இது அமையும். அத்துடன் வெறுமனே வாக்கு அரசியலுக்காக சிந்திக்காது இனநலனையும் கருத்தில் கொண்டு முடிவுகள் எடுக்க வேண்டும்.
தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு எதற்காக உருவாக்கப்பட்டதோ அந்த கொள்கையில் கூட்டமைப்பாக ஒன்றாக பயணிக்க வேண்டும்.
இலாப – நட்ட கணக்குகளின் படி ஐந்து, ஆறு ஆசனங்கள் அதிகமாக கிடைக்கும் என்பதற்காக கூட்டமைப்பை பிளவுபடுத்துவது ஏற்க முடியாது.
அதைவிட, ஒற்றுமையாக கூட்டமைப்பாக போட்டியிட்டால் அருதிபெரும்பாண்மையை பெற்றுக்கொள்ள முடியும்.
எனவே, இனநலனை சிந்திக்கும் தலைவர்கள் தமிழரசு கட்சியில் இருக்கின்றார்கள் என நம்புகிறோம். கூட்டமைப்பை பிளவுபடுத்தும் முயற்சிகளை அப்படியான தமிழரசுகட்சியிலுள்ள தலைவர்கள் முறியடிக்க வேண்டும்” என்றார்.
