உள்ளூராட்சி சபைத்தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் ஏற்கும் திகதி அறிவிக்கப்பட்டதில் இருந்து தமிழ் தேசிய கட்சிகள் மட்டத்தில் பெரும் பரபரப்புக்கள் இடம்பெற்று வருகின்றன.
கடந்த 7 ஆம் திகதி இடம்பெற்ற தமிழரசுகட்சியின் மத்தியகுழு கூட்டத்தில் தமிழரசு கட்சி தனியாக உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிட வேண்டும் என்ற கோரிக்கை கூட்டத்தில் கலந்து கொண்ட பலரால் முன்வைக்கப்பட்டிருந்தது.
ஆயினும் தமிழரசு கட்சி தேர்தலில் தனித்து போட்டியிடுவதா? இல்லையா? என்ற முடிவு நாளை (10) தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்களுடன் பேசிய பின்பே இறுதி முடிவு அறிவிக்கப்படுமென தமிழிரசு கட்சியின் தலைவர் மாவை.சேனாதிராசா தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், தமிழ்தேசிய பரப்பில் மீண்டும் ஒரு திருப்பமாக நாடாளுமன்ற உறுப்பினர் க.விக்கினேஸ்வரனின் தமிழ் மக்கள் விடுதலைக்கூட்டணியும், தமிழ் தேசிய மக்கள் முண்ணனியில் இருந்து பிரிந்து சென்ற மணிவண்ணனும் இணைந்து போட்டியிடவுள்ளனர்.
இதுபற்றிய அறிவித்தல் இன்று மாலை அறிவிக்கப்பட்டுள்ளது. மான் சின்னத்தில் போட்டியிடவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கரையோரப்பகுதிகளில் மீன் சின்னத்தில் போட்டியிடவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில், தமிழரசு கட்சி தனித்துப்போட்டியிடும் முடிவை நாளை எடுத்தால், புளொட், ரெலோ, மற்றும் ஈ.பி.ஆர்.எல்.எப், அனந்தி சசிதரன், தமிழ் தேசிய கட்சி மற்றும் சில கட்சிகள் ஆகியன விக்கி – மணிவண்ணன் கூட்டணியில் போட்டியிடுமென அரசியல் முக்கியஸ்தர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் எதிர்காலத்தில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பை பதிவு செய்து நிர்வாக கட்டமைப்புடன் உருவாக்கி அடுத்த தேர்தலுக்கும் சிறப்பான கட்சியாக மாற்றுவதற்கான வழிவகுக்கப்படுவதாகவும் மேலும் அவர் தெரிவித்தார்.
இந்நிலையில், தமிழரசுகட்சியும் எடுத்த தீர்மானத்தில் இருந்து மாற்றிக்கொள்வதற்கான அறிகுறிகள் இல்லையென தமிழரசு கட்சியின் முக்கியஸ்தர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் விக்கிகூட்டணியில் மற்றைகட்சிகள் இணைந்து போட்டியிடும் பட்சத்தில் ஒவ்வொரு கட்சிக்கும் ஒவ்வொரு தொகுதி என்ற வகையில் அமையவுள்ளதாகவும் யாழ்ப்பாண அரசியல் தகவல்கள் தெரிவிக்கின்றன.
