உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் செய்யும் திகதி தேர்தல் ஆணைக்குழுவால் அறிவிக்கப்பட்டாலும், தேர்தலுக்கான திகதி இன்னமும் அறிவிக்கப்படவில்லை.
தேர்தல் இக்காலப்பகுதியில் நடக்குமா? நடக்காதா? என்பது இன்னமும உறுதியாகாத நிலையில் தமிழ் தேசிய அரசியல் களம் மிகவும் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.
உள்ளூராட்சி தேர்தல் நடக்கும் முன்னரே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்து விலகிச் சென்று தனியாக தமிழரசு கட்சி தேர்தலில் போட்டியிட வேண்டும் என்ற சிந்தனை தமிழரசுகட்சி சார்பான பெரும்பாலானோர்களில் நிலை கொண்டிருந்தது.
இந்நிலையில், மத்தியகுழுவில் எடுக்கப்பட்ட தீர்மானம் என்ற போர்வையில் அந்த செயற்பாடு நிறைவேறியுள்ளதாகவே அரசியல் அவதானிகள் தெரிவிக்கின்றனர்.
தமிழ்த்தேசிய கூட்டமைப்பாக இல்லாது தமிழ்தேசிய கூட்டமைப்பில் அங்கம் வகிக்கின்ற மூன்று கட்சிகளும் தனித்தனியாக தேர்தலில் போட்டியிட்டு, ஆட்சி அமைக்கும் போது கூட்டாக ஆட்சி அமைப்பது என்ற தீர்மானம் நேற்று இடம்பெற்ற த.தேசியக் கூட்டடைப்பின் ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் எடுக்கப்பட்டதாக சுமந்திரன் எம்.பி தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், தமிழரசு கட்சி தனியாக தேர்தலை எதிர்கொள்வதற்கு தயாராகியுள்ள நிலையில், வேகமாக கட்டுப்பணங்களையும் செலுத்திவருகின்றது.
மட்டக்களப்பு, கிளிநொச்சி, மன்னார், வவுனியா மாவட்டங்களில் தமிழரசுகட்சி கட்டுப்பணங்களை இன்று (11) செலுத்தியுள்ளது.
இந்நிலையில், மறுபுறம் பழைய கட்சிகளுடன் மீண்டும் ஒரு கூட்டணி உருவாகியுள்ளதாக அறிய வருகிறது. நாடாளுமன்ற உறுப்பினர் விக்கினேஸ்வரனின் தலைமையில் இக்கூட்டணி அமையவுள்ளதாக அரசியல் அவதானிகள் கருத்து தெரிவிக்கின்றனர்.
விக்கினேஸ்வரனும் முன்னாள் யாழ்.மாநகர முதல்வர் மணிவண்ணனும் இணைந்து போட்டியிடவுள்ளதாக பகிரங்கமாக ஏற்கனவே அறிவித்துள்ளனர்.
இந்நிலையில் விக்கினேஸ்வரனின் கூட்டில், தமிழ் தேசிய கூட்டில் அங்கம் வகித்த ரெலோ, புளொட், ஜனநாயக போராளிகள் கட்சிகள் இணையவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அத்துடன், ஈ.பி.ஆர்.எல்.எப்., தமிழ் தேசிய கட்சி, இன்னும் சில கட்சிகளும் இணைந்து மெகா கூட்டணியாக போட்டியிடவுள்ளதாக தெரியவருகிறது.
இவ்அறிவிப்பு எதிர்வரும் 14 ஆம் திகதி அறிவிக்கப்பட உள்ளதாகவும் தெரியவருகிறது.
இந்நிலையில், தமிழ்தேசியக் கட்சிகள் எனத் தெரிவிக்கப்படுகின்ற கட்சிகள் மூன்று பிரிவுகளாக தேர்தலில் போட்டியிடவுள்ளமை உறுதிபடத் தெரியவருகிறது.
தமிழ் தேசிய மக்கள் முன்னணி, தமிழரசுகட்சி, விக்கினேஸ்வரின் கூட்டணி என மூன்று பிரிவுகளாக தேர்தலில் போட்டியிடவுள்ளன.
தமிழ்தேசியம் என்பதை நிலைநிறுத்தியே இக்கட்சிகள் தேர்தலில் களமிறங்குகின்றன. எனவே தமிழ் மக்களின் வாக்குகள் பிரித்து சிதைக்கப்பட உளளதாக அரசியல் விமசகர்கள் கருத்து வெளியிடுகின்றனர்.
இந்நிலையில், கருணா அம்மானின் கட்சி மற்றும் பிள்ளையானின் கட்சியும் யாழ்ப்பாணத்தில் போட்டியிடவுள்ளதாக தெரியவருகிறது.
வடக்கு – கிழக்கு பகுதிகளில் தமிழர் அரசியல்களம் சூடு பிடித்தாலும், குறிப்பாக யாழ்ப்பாணத்தை முதன்மையாகக் கொண்டே கட்சிகள் தேர்தலை முதன்மை படுத்துவதாகவும் விமசகர்களின் கருத்து அமைகின்றது.
