உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்காக தமிழ்தேசிய கட்சிகளால் புதியதாக உருவாக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்ட கூட்டணி உருவாக முன்னரே பிளவுபட்டுள்ளதாக தெரியவருகிறது.
நாடாளுமன்ற உறுப்பினர் விக்கினேஸ்வரனின் தமிழ் மக்கள் கூட்டணியும், மற்றைய தமிழ் தேசிய கட்சிகளுமே இணைந்து கூட்டணியாக அமைத்து தேர்தலில் போட்டியிடுவதற்கான பேச்சுக்களில் ஈடுபட்டிருந்தனர்.
இன்று (13) இடம்பெற்ற பேச்சுக்களின் இடைநடுவில் விக்கினேஸ்வரன் மற்றும் மணிவண்ணன் ஆகியோர் விலகிச்சென்றுள்ளதாக தெரியவருகிறது.
நடைபெறவுள்ள உள்ளூராட்சிசபைத் தேர்தலில் பெரும்பாண்மை கட்சிகள் தமிழர் பகுதிகளில் ஆசனங்கள் பெறுவதை குறைக்கும் நோக்கத்தில் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகள் தனித்தனியாக தேர்தலை கேட்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து தமிழரசுகட்சி தனியாக தேர்தலை கேட்கும் முடிவை எடுத்துள்ளது.
இந்நிலையில் திடீரென விக்கி மற்றும் மணிவண்ணன் ஆகியோர் இணைந்து தேர்தலில் போட்டியிடப்போவதாக அறிவித்திருந்தனர். இந்நிலையில் மண்ணிவண்ணன் தங்கள் கட்சியுடன் கூட்டுச் சேரவில்லை எனவும், தங்கள் கட்சியில் உறுப்பினராக இணைந்துள்ளார் என்ற புது விளக்கத்தை விக்கினேஸ்வரன் நேற்று (12) தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகித்த ரெலோ, புளோட் , மற்றும் ஈ.பி.ஆர்.எல்.எப், தமிழ்தேசிய கட்சி மற்றும் சில கட்சிகள் இணைந்து மெகா கூட்டணியாக உருவாகி தேர்தலில் போட்டியிடப்போவதாக கருத்துக்கள் பகிரப்பட்டு வந்தன.
இந்தக் புதுகூட்டணி அமைப்பது தொடர்பாக சில நாட்களாவே பேச்சுக்கள் இடம்பெற்றுவந்த நிலையில், நேற்றும், இன்றும் முக்கிய பேச்சுக்கள் இடம்பெற்றன.
இன்று காலையில் இடம்பெற்ற பேச்சுக்களில் இணக்கம் எட்டப்படாத நிலையில், விக்கினேஸ்வரன் மற்றும் மணிவண்ணன் ஆகியோர் வேறுகூட்டம் இருப்பதாக தெரிவித்து இடையில் வெளியேறியதாக தெரிய வருகிறது.
எந்தச்சின்னத்தில் போட்டியிடுவது என்பதிலையே முரண்பாடு தோன்றியதாக தெரியவருகிறது. விக்கினேஸ்வரன் தரப்பினர் மான் சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்று உறுதியாக தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், மற்றைய கட்சிகள் ஏற்கனவே தமிழ் தேசியக்கூட்டமைப்பில் தமிழரசுகட்சியின் சின்னத்தில் போட்டியிட்டதாலேயே இவ்வளவு குழப்பங்கள் தோன்றியுள்ளன.
எனவே, மீண்டும் அதே தவறைச்செய்யாது தமிழ் மக்கள் கூட்டணியின் சின்னமான மான் சினனத்தில் போட்டியிடமால் பொதுச்சின்னத்தில் போட்டியிடலாம் ஏன்ற கருத்தை முன்வைத்தனர்.
மற்றைய கட்சிகளால் குத்துவிளக்கு பொதுச்சின்னமாக முன்மொழியப்பட்டது. அதனை ஏற்பதற்கு விக்கினேஸ்வரன் தரப்பினர் மறுத்துள்ளனர். ஆயுதக்கட்சிகளுடன் தொடர்புடைய சின்னத்தில் போட்டியிடமாட்டோம் என காரணம் தெரிவிக்கப்பட்டதாகவும் குறிப்பிடப்படுகிறது.
இந்நிலையில், மீன் சின்னத்தில் போட்டியிடலாம் என்ற கோரிக்கையும் மாற்றுக்கட்சிகளால் முன்வைக்கப்பட்ட நிலையில், அதனையும் விக்கினேஸ்வரன் தரப்பினர் மறுத்துள்ளதாக தெரிய வருகிறது.
மான் சின்னத்திலேயே போட்டியிட வேண்டும் என்று விக்கினேஸ்வரன் தரப்பினர் இறுதிவரை அடம்பிடித்ததாகவும் பேச்சுக்களில் கலந்து கொண்ட முக்கியஸ்தர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், புதிய கூட்டணியின் பொதுச்செயலாளர் என்ற பதவியும் விக்கினேஸ்வரனுக்கு வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டதாக தெரியவருகிறது.
இக்கோரிக்ககைளால் ஏற்பட்ட முரண்பாடுகளினாலே புதிய கூட்டணியில் இருந்து விக்கினேஸ்வரன் தரப்பு விலகிச்சென்றுள்ளதாக அரசியல் அவதானிகள் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில், விக்கினேஸ்வரன் மற்றும் மணிவண்ணன் இல்லாத புதிய கூட்டு உருவாவதற்கான கலந்துரையாடல்கள் தற்போது இடம்பெற்று வருவதாகவும் தெரியவருகிறது.
இந்நிலையில், தமிழ்தேசிய அரசியலை மையப்படுத்தி நான்கு கட்சிகள் தேர்தலில் போட்டியிட்டால் தமிழ்மக்களின் வாக்குகள் சின்னாபின்னமாகி தமிழ்தேசிய அரசியலை சிதைக்கும் நடவடிக்கைகளில் தழிழ் தேசிய கட்சிகள் ஈடுபடபோவதாக அரசியல் விமசகர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.
