வல்வெட்டித்துறை உதயசூரியன் கடற்கரையில் விசித்திரமான பட்டத் திருவிழா இன்று 11 வது வருடமாகவும் இடம்பெற்றது.
தமிழர் திருநாளான தைப்பொங்கல் தினத்தினை முன்னிட்டு ஆண்டுதோறும் ராட்சத ‘பட்ட திருவிழா’ நடைபெறுவது வழக்கம்.
பட்டம் விடுவது என்பது நமது பாரம்பரிய விளையாட்டு ஆகும்.
பட்டம் ஏற்றுவதற்கு காற்றின் பங்களிப்பு மிகவும் அவசியமானது. அந்தவகையில் வாடைகாற்று ஜப்பசி மாதத்திற்கு பிறகு ஆரம்பித்தாலும் கூட அக்காலப்பகுதி மழை என்பதனால் பட்டம் ஏற்றுவதற்கு பொருத்தமான காலமாக இருக்காது.
இதனால் வாடைக்காற்றின் இறுதிக்காலமான தைமாதத்தினையும் விசேட தினமாக தைப்பொங்கலையும் பட்டப் போட்டி நடாத்துவதற்கு தேர்ந்தெடுத்தார்கள் என்று கூறுகின்றார்.
விக்னேஷ்வரா சனசமூக சேவா நிலையமும், உதயசூரியன் விளையாட்டுக் கழகமும் இணைந்து உதய சூரியன் உல்லாசக் கடற்கரையில் இப்பட்டத் திருவிழாவினை நடாத்தி வருகின்றார்கள்.
இலங்கையில் எங்குமில்லாதவாறு ராட்சத பட்டங்களை பறக்கவிடுவது இந்த பட்டத் திருவிழாவின் சிறப்பு அம்சமாகும்.இதனடிப்படையில் இன்றும் இப் பட்டத்திருவிழா சிறப்பாக நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.
இப்பட்டத்திருவிழாவில் பல்வேறு வகையிலான பட்டங்கள் ஏற்றப்பட்டன. குறிப்பாக போர்விமானம், சிகரெட், இராட்சத கணவாய், படகு, ஜெட், கழுகு, உழவு இயந்திரம் போன்ற பல வடிவங்களிலான பட்டங்கள் வானத்தில் வட்டமிட்டன.
இப்பட்டத் திருவிழாவிற்கு பல்வேறு இடங்களில் இருந்தும் ஏராளமான மக்கள் கலந்துகொண்டு தமிழர் பாரம்பரிய நிகழ்வை சிறப்பித்துக் கொண்டிருப்பது விசேட அம்சமாகும்.
