அவுஸ்ரேலியா நாட்டைச் சேர்ந்த மரதன் ஓட்டப்பந்தய வீராங்கனை எர்ச்சனா முர்ரே பார்ட்லெட்.
32 வயதான இவர் ஆரம்பத்தில் தொழில்முறை ஓட்டப்பந்தய வீராங்கனையாக இருந்தார். ஆனால் டோக்கியோ ஒலிம்பிக்கிற்கு தகுதி பெறுவதை தவறவிட்ட பிறகு தனது மற்றொரு திறமையில் கவனத்தை திருப்பினார். மரதன் ஓட்டம் மூலம் முழு அவுஸ்ரேலியாவையும் சுற்றிவர முடிவு செய்தார்.
அதன்படி, 5 மாதங்களுக்கு முன்பு அவுஸ்ரேலியாவின் ஒரு முனையில் இருந்து நாட்டின் தெற்கு எல்லையை இலக்காக கொண்டு தனது மரதன் ஓட்டத்தை முர்ரே தொடங்கினார். ஆஸ்திரேலிய விலங்குகள் மற்றும் தாவரங்களை பாதிக்கும் பேரழிவு குறித்த விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்த மரதன் ஓட்டத்தை நடத்தினார்.
தொடர் மரதன் ஓட்டத்தால் உடல் சோர்வு, உடலில் கொப்புளங்கள், கால் வீக்கம் போன்ற பல பிரச்சினைகளை சந்தித்தபோதும் முர்ரே மரதன் ஓடுவதை நிறுத்தாமல் தொடர்ந்து ஓடினார்.
அதன்படி அவர் 150 நாட்களுக்கு தினமும் ஒரு மரதன் ஓடி 6,300 கி.மீ. தூரத்தை நிறைவு செய்தார். இதன் மூலம் கேட் ஜேடனின் சாதனையை முறியடித்து, அதிக நாட்களுக்கு தினமும் ஒரு மரதன் ஓடிய பெண் என்கிற உலக சாதனையை முர்ரே படைத்துள்ளார்.
