யாழ்.நகரில் உள்ள பிரபல்யமான ஹொட்டல் ஒன்றின் ரூமில் தங்கியிருந்த இளம் ஜோடியை தொலைபேசியில் இரகசியமாக காணொளி பதிவு செய்த ஹொட்டல் ஊழியர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த திங்கட்கிழமை தென்பகுதியைச் சேர்ந்த இளைஞனும், வவுனியாவைச் சேர்ந்த யுவதி ஒருவரும் ரூம் எடுத்து தங்கியுள்ளனர்.
நள்ளிரவில் ஏசிக்கு அருகில் காணப்பட்ட துவாரம் ஊடாக காணொளி எடுக்கப்படுவதை அவதானித்த அவர்கள் வெளியில் வந்து பார்த்தனர்.
அப்போது, அதே தளத்தில் இருந்த ரூம் ஒன்றின் கதவு சடுதியாக மூடப்பட்டது. உடனடியாக இச்சம்பவம் தொடர்பில் குறித்த ஜோடி ஹொட்டலின் மற்றைய ஊழியர்களுக்கு தெரியப்படுத்தின.
எனினும், அவர்கள் பெரிதாக கண்டுகொள்ளவில்லை. குறித்த ஜோடி ஊழியர்களுடன் முரண்பட்ட நிலையில், சடுதியாக கதவு மூடப்பட்ட ரூமை திறந்து பார்த்த போது ஊழியர் ஒருவர் அந்த ரூமில் இருந்துள்ளார்.
அவருடைய தொலைபேசியை வாங்கி சோதனை செய்த போது குறித்த ஜோடிகள் நெருக்கமாக இருந்த காட்சிகள் காணொளி செய்யப்பட்டிருந்தமை உறுதியானது.
இந்நிலையில், குறித்த ஜோடியினர் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்தனர். காணொளி பதிவு செய்த ஹொட்டல் ஊழியர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில், இதற்கு முன்பும் இப்படியான சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதா என்ற கோணத்தில் பொலிஸார் விசாரணைகளை மேற்க்கொண்டு வருகின்றனர்.
