ஊரெழு றோயல் வி.கழகம் நடத்தும் “வடக்கின் சமர்” தொடரில் முதலாவது காலிறுதிப் போட்டி இன்று (27) உரும்பிராய் இந்துக்கல்லூரி மைதானத்தில் இடம்பெற்றது.
யாழ்.மாவட்டத்தில் சமபலம் பொருந்திய குருநகர் பாடுமீன் வி.கழகமும் ஆனைக்கோட்டை யூனியன் வி.கழகமும் பலப்பரீட்சை நடத்தின.
போட்டியின் முதற்பாதி ஆட்டத்தில் இரண்டு அணிகளும் அனல் பறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தின. தமது வழமையான அதிரடி ஆட்டம் மூலம் போட்டி ஆரம்பித்து 10 நிமிடத்திற்குள் முதலாவது கோலை பாடுமீன் பதிவு செய்தது. இந்நிலையில், முதற்பாதியாட்டம் 1:0 என்ற கோல் கணக்கில் நிறைவுக்கு வந்தது.
இரண்டாவது பாதியாட்டத்தில் வழமையான ஆட்டத்தை விட வேகமான ஆட்டத்தை வெளிப்படுத்திய யூனியன் வி.கழகம் பாடுமீனின் கோல்கம்ப எல்லையை ஆக்கிரமித்த வண்ணமே இருந்தது.
பல விறுவிறுப்பான களங்களைக் கண்ட பாடுமீன் வி.கழகம் யூனியனின் ஆக்கிரமிப்பு ஆட்டத்திற்கு தமது எதிர்ப்பு ஆட்டத்தை வெளிப்படுத்திய வண்ணமே இருந்தது.
இந்நிலையில், பாடுமீன் வி.கழகத்தின் இளைய நட்சத்திரம் கீதன் அவர்கள் தனக்கு கிடைத்த சந்தர்ப்பத்தை தனது சாதுரியமான ஆட்டத்தால் கோலாக்க இறுதியில் பாடுமீன் வி.கழகம் 2:0 என்ற கோல் கணக்கில் யூனியன் வி.கழகத்தை வெற்றி கொண்டு முதலாவது அணியாக அரையிறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.
இந்தப்போட்டியோடு இத்தொடரில் இருந்து யூனியன் வி.கழகம் வெளியேறினாலும் பல இரசிகர்களின் ஆதரவுக்களங்களை பற்றிப்பிடித்த ஆதரவுத் தளத்தோடு வெளியேறியது.
நாளைய இரண்டாவது காலிறுதிப் போட்டியில், நாவந்துறை சென்.நீக்கிலஸ்
வி.கழகத்தை எதிர்த்து வடமராட்சி நவஜீவன்ஸ் வி.கழகம் மோதவுள்ளது.
நாளைய சிறப்பு முதலாவது போட்டியாக 40 வயதுக்கு மேற்றப்பட்ட வீரர்கள் பங்குபெறும் சிறப்பு உதைபந்தாட்ட போட்டி இடம்பெற இருக்கின்றது.
இப்போட்டியில் யாழ்ப்பாணம் கலைவாணி வி.கழகத்தை எதிர்த்து அரியாலை ஐக்கிய வி.கழகம் மோதவுள்ளது.
இப்போட்டிகளுக்கு தமிழ் ஒளி இணையத்தளம் ஊடக அனுசரணை வழங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.
