யாழ்ப்பாணத்தில் மீற்றர் வட்டிக்கு பணம் கொடுத்தவர்களிடம் பணத்தை மீள வசூலிப்பதற்காக அடித்து துன்புறுத்தும் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸார் தெரிவித்தனர்.
அவர்களில் முதன்மை சந்தேக நபர் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டு வரும் பெப்ரவரி 10ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். அவருடன் தொடர்புடைய முச்சக்கர வண்டி சாரதி உள்ளிட்ட ஐவர் நேற்றிரவு கைது செய்யப்பட்டுள்ளனர்.
அத்துடன் சுன்னாகத்தைச் சேர்ந்த ஒருவர் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் நேற்று சரணடைந்துள்ளார் என்று பொலிஸார் குறிப்பிட்டனர்.
மீற்றர் வட்டிக்கு பணம் பெற்றவர்களை தோட்டக் காணி ஒன்றுக்கு அழைத்து வந்து கொடூரமாகத் தாக்கி துன்புறுத்தும் காணொளி காட்சிகள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன.
இந்த காணொளிகள் தொடர்பில் வடமாகாண மூத்த பிரதிப் பொலிஸ் மா அதிபரின் கவனத்துக்கும் கொண்டுவரப்பட்டது.
மீற்றர் வட்டிக்கு வழங்கிவிட்டு பணத்தை மீள வசூலிப்பதற்காக வர்த்தகர்களை அடித்துத் துன்புறுத்தும் இருபதற்கும் மேற்பட்ட காணொளிகள் பொலிஸ் உயர்மட்டத்துக்கு அனுப்பப்பட்டன.
மருதனார்மடம் சந்தைக்கு அண்மையாக உள்ள தோட்டக்காணிக்கு அழைத்தே பலரை அடித்துத் துன்புறுத்தியும் அச்சுறுத்தியும் உள்ளனர் என்பதும் விசாரணைகளில் கண்டறியப்பட்டது.
காணொளியில் முகக்கவசம் அணிந்து அடித்து துன்புறத்தும் நபர் நேற்றுமுன்தினம் யாழ்ப்பாணத்தில் வைத்து கைது செய்யப்பட்டார்.
முதன்மை சந்தேக நபர் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் நேற்று முற்படுத்தப்பட்டார். அவரை பெப்ரவரி 10ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க நீதிவான் ஏ.ஏ.ஆனந்தராஜா உத்தரவிட்டார்.
இந்நிலையில் தொடர்ந்து விசாரணைகளை முன்னெடுத்த யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவினர் முச்சக்கர வண்டி சாரதி உள்ளிட்ட ஐவரை நேற்றிரவு கைது செய்தனர்.
