மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை படுகொலையின் 36வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று (28) உணர்வுபூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டது.
மட்டக்களப்பு மகிழடித்தீவு சந்தியில் உள்ள படுகொலை
செய்யப்பட்டவர்களின் நினைவுத்தூபியில் இன்றைய தினம் அஞ்சலி நிகழ்வுகள் நடைபெற்றன.
இலங்கை தமிழரசுக்கட்சியின் பட்டிருப்பு தொகுதி தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான பா.அரியநேத்திரன் தலைமையில் தமிழரசுக்கட்சியின் நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது.
இதன்போது ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டதுடன் உயிர்நீர்த்தவர்களின் ஆத்மசாந்திவேண்டி அகவணக்கமும் செலுத்தப்பட்டது.
28-01-1987 மற்றும் 12-06-1991ஆகிய காலப்பகுதிகளில் இராணுவம் மற்றும் விசேட அதிரடிப்படையினரால் மகிழடித்தீவு இரால்பண்ணை மற்றும் கொக்கட்டிச்சோலை ஆகிய பகுதிகளில் 239பேர் படுகொலைசெய்யப்பட்டனர்.
