இளவாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பெரியவிளான் பகுதியில், இரும்புக்கம்பியால் தாக்கப்பட்டு ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
அதே பகுதியைச் சேர்ந்த 29 வயதுடைய நிரோஜன் என்பவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.
குறித்த இளைஞர் வீதியால் சென்று கொண்டிருந்த வேளை (26), போதையில் வந்த இருவர் அவருடன் முரண்பட்டனர். முரண்பாடு கைகலப்பாக மாறிய நிலையில், இருவரும் சேர்ந்து இரும்புக் கம்பியால் குறித்த இளைஞரின் தலையில் அடித்துள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது.
இதில், படுகாயமடைந்த இளைஞர் மீட்கப்பட்டு யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். எனினும், சிகிச்சை பலனின்றி அவர் நேற்று (27) உயிரிழந்துள்ளார்.
இந்த படுகொலையுடன் தொடர்புடைய சந்தேகத்தில் 17, 19 வயதுடைய இருவர் இளவாலை பொலிஸரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
