” என்னால் ஆரம்பிக்கப்பட்ட செயற்றிட்டங்களைத்தான் முன்னாள் முதல்வர் மணிவண்ணன் செய்தாரே ஒழிய அவர் ஒன்றும் புதிதாக செய்யவில்லை” என யாழ்.மாநகரசபையின் தற்போதைய முதல்வர் இம்மானுவேல் ஆர்னோல்ட் தெரிவித்தார்.
யாழ்.மாநகர சபையில் இன்று (31) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“நேற்று சபைக்கு வராமல் கையொப்பம் வைத்துவிட்டு சென்றிருக்கிறார்கள். சபையின் கூட்டத்தில் முழுமையாக கலந்து கொள்ளாது ஒரு உண்மைக்கு புறம்பான செய்தியை வெளியிடுவது மக்களை ஏமாற்றும் செயலாகவே நாங்கள் பார்க்கிறோம்.
தாம் கொண்டுவந்த செயல்திட்டங்களை நடைமுறைப்படுத்துகிறார்கள் நீங்கள் ஒண்டும் செய்யவில்லை என்று கூறுகிறார்கள். ஆனால், கல்லுகளில் அவர்களின் பெயர்போட்ட எல்லாத்திட்டங்களும் எனது காலத்தில் கொண்டுவரப்பட்ட திட்டங்கள்.
ஆரிய குளத்தை தவிர புனரமைக்கப்பட்ட மற்றைய அனைத்து குளங்களும் நான் முதல்வராக இருக்கும்போது வெளிநாட்டு நிறுவனங்களால் முன்மொழியப்பட்ட திட்டங்களாகும்.
நான் முதல்வராக இருக்கும்போது 720 மில்லியன் ரூபா நிதியினை பெற்று பல்வேறு திட்டங்களை நடைமுறைப் படுத்தியுள்ளேன். கம்பெரலியா திட்டங்களை விட வேறு பல திட்டங்களையும் செயற்படுத்தி இருக்கிறோம்.
யுத்தத்தால் அழிவடைந்த யாழ்.மாநகரசபையின் நிரந்தர கட்டிடத்தினை நல்லாட்சி அரசாங்கத்தில் பிரதமராகவும், தற்போது ஜனாதிபதியாவும் உள்ள ரணில் விக்கிரமசிங்கவுடன் பேச்சுவார்த்தை நடத்தி அந்தக்கட்டிடத்தினை கட்டுவதற்கு நானே அடித்தளம் இட்டேன்.
முன்னாள் முதல்வரால் சமர்ப்பிக்கப்பட்ட 2023 ஆம் ஆண்டுக்கான பாதீடு தோற்கடிக்கப்பட்ட நிலையில், இரண்டாவது தடவையாக பாதீட்டைசமர்ப்பிக்க வக்கில்லாத முன்னாள் முதல்வர் ஊடகவியலாளர்களை அழைத்து பொய்கூறுகிறார். வெட்கம் இல்லையா?” என்றார்.
